செய்திகள்

90 வயது மூதாட்டியை ஒகேனக்கல்லில் விட்டு சென்ற உறவினர்கள்

Published On 2018-09-28 10:52 GMT   |   Update On 2018-09-28 10:52 GMT
ஒகேனக்கல் பஸ் நிலையத்தில் 90 வயது மூதாட்டியை உறவினர்கள் விட்டு சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒகேனக்கல்:

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த காமன்தொட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கட்டம்மாள் (வயது 90). இவர் வீட்டில் தவறி விழுந்ததில் காலில் அடிபட்டது. கட்டு போடுவதாக கூறி ஒரு ஆட்டோவில் இவரை பேரன் சிவராஜ், அவரது மனைவி உஷா ஆகியோர் பென்னாகரத்தை அடுத்த நல்லாம்பட்டிக்கு அழைத்து வந்தனர். ஆனால் கட்டு போடாமால் ஒகேனக்கல் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு சென்றுவிட்டனர்.

கடந்த 10 நாட்களாக அங்கு தவித்து வரும் மூதாட்டி வெங்கட்டம்மாளுக்கு சுற்றுலா வரும் பயணிகள் உணவு வாங்கி கொடுக்கிறார்கள்.

இந்த மூதாட்டி குறித்து ஒகேனக்கல் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் மூதாட்டியின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்து உள்ளனர். அந்த மூதாட்டியை அவர்கள் அழைத்து செல்லாவிட்டால் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

இது குறித்து மூதாட்டி வெங்கட்டம்மாள் கூறியதாவது:-

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவர் இறந்துவிட்டார். அதன்பிறகு எனது 2 மகன்களும் இறந்தனர். இதனால் எனது மகள் முனிரத்தினம் வீட்டில் தங்கி இருந்தேன். அங்கு 2 மாதங்களுக்கு முன்பு கீழே விழுந்ததில் காலில் அடிபட்டது. கட்டு போடுவதாக கூறி என்னை பேரனும், பேத்தியும் அழைத்து வந்து ஒகேனக்கல்லில் விட்டு சென்றுவிட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News