செய்திகள்

போலீஸ் அதிகாரி கோபால கிருஷ்ணனுக்கு மேட்டூரில் வெண்கல சிலை

Published On 2018-09-12 06:36 GMT   |   Update On 2018-09-12 06:36 GMT
சேலம் மாவட்டம் மேட்டூரில் வீரப்பன் வேட்டையில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி கோபால கிருஷ்ணனுக்கு வெண்கல சிலை அமைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
மேட்டூர்:

தமிழகம் மற்றும் கர்நாடக வனப்பகுதிகளில் சிம்ம சொப்பனமாக சந்தனக் கடத்தல் வீரப்பன் இருந்து வந்தார். அவரை பிடிப்பதற்காக தமிழக அரசு சார்பில் அப்போது போலீஸ் சூப்பிரண்டாக இருந்த கோபாலகிருஷ்ணன் தலைமையில் அதிரடிப்படை அமைத்தது.

தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியான பாலாறு பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது கன்னிவெடியில் சிக்கி அவர் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்த அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் அரசு சார்பில் அவருக்கு உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

அப்போது கோபால கிருஷ்ணன், வீரப்பனை பிடிக்காமல் தான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என சபதம் ஏற்று, கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் கோபால கிருஷ்ணன் டி.ஐ.ஜி.-ஆக பதவி உயர்வு பெற்றார். பின்னர் கமி‌ஷனராக பதவி உயர்வு பெற்று சேலத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

கடந்த 2 வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக கோபால கிருஷ்ணன் இறந்தார். மேட்டூர் தங்கமாபுரிப்பட்டணம் அருகே உள்ள பெரியார் நகரில் குடும்பத்தினருக்கு சொந்தமான இடத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

நேற்று 2-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த நிலையில் அவரது நினைவிடத்தில் சிலை அமைக்க முடிவு செய்து, வெண்கலத்தில் கோபாலகிருஷ்ணன் சிலை செய்து கொண்டு வரப்பட்டு வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையை அவரது நினைவிடத்தில் நிறுவுவதற்கான பணிகள் அங்கு மும்முரமாக நடந்து வருகின்றன. போலீஸ் அதிகாரி கோபால கிருஷ்ணன் பிறந்த நாளான டிசம்பர் 5-ந்தேதி அன்று அவரது சிலையை நினைவிடத்தில் நிறுவி நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் திறக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News