செய்திகள்
சீர்காழி கோர்ட்டுக்கு திருமுருகன் காந்தியை போலீசார் அழைத்து வந்த போது எடுத்த படம்.

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்திக்கு ஜாமீன்

Published On 2018-09-07 04:32 GMT   |   Update On 2018-09-07 04:32 GMT
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. #ThirumuruganGandhi
சீர்காழி:

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பெருந்தோட்டம் கிராமத்தில் கடந்த ஏப்ரல் மாதம் அம்பேத்கர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது இந்திய ஒருமைப்பாட்டுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும் இரு சமூகத்தினரிடையே பிரச்சனையை தூண்டும் வகையிலும் பேசியதாக அவர் மீது திருவெண்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

இதற்காக வேலூர் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருமுருகன் காந்தி சீர்காழிக்கு அழைத்து வரப்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது திருமுருகன் காந்திக்கு ஜாமீன் வழங்கி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி யுவராஜ் உத்தரவிட்டார்.

பின்னர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த திருமுருகன் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் 161-வது பிரிவின் கீழ் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

பா.ஜ.க.வுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பிய மாணவி சோபியா மீதான வழக்கு கருத்துரிமைக்கு எதிரானது. எனவே அந்த வழக்கை திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #ThirumuruganGandhi
Tags:    

Similar News