செய்திகள்

ஜப்பான் தொழில் அதிபர்களுடன் அமைச்சர் ஜெயக்குமார் சந்திப்பு

Published On 2018-08-25 09:47 GMT   |   Update On 2018-08-25 09:47 GMT
ஜப்பான் அகில உலக கடல் உணவு தொழில் நுட்பம் மற்றும் கண்காட்சி நிகழ்ச்சியில் இந்திய தூதரகம் மூலம் ஜப்பான் நாட்டில் உள்ள தொழில் அதிபர்களை அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார். #Jayakumar #ADMK

சென்னை:

தமிழக மீன் வளம், பணியாளர் மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த 20வது சர்வதேச கடல் உணவு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியில் இந்தியா சார்பில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

கண்காட்சியில் ஜப்பான் நாட்டின் பாரம்பரிய நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டு இருந்த அரங்கினையும் திறந்துவைத்தார். பின்னர் அந்த நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஜப்பான் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.

அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜப்பான் தமிழ்சங்கம் சார்பில் வரவேற்பும் அளிக்கப்பட்டது. ஜப்பான் அகில உலக கடல் உணவு தொழில் நுட்பம் மற்றும் கண்காட்சி நிகழ்ச்சியில் இந்திய தூதரகம் மூலம் ஜப்பான் நாட்டில் உள்ள தொழில் அதிபர்களை அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார். அப்போது அவர்களிடம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து எடுத்துக் கூறினார்.

பின்னர் கண்காட்சியில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழில் அதிபர்களிடம் சென்னையில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு வருமாறும் தமிழ் நாட்டில் மீன் வளம் மற்றும் மீனவர் நலன் சார்ந்த தொழில்களில் முதலீடு செய்யுமாறும் நேரடியாக அழைப்பு விடுத்தார்.

நிகழ்ச்சியில் கால்நடை, பால்வளம் மற்றும் மீன் வளத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் கே.கோபால், மீன்வளத்துறை இயக்குனர் டாக்டர் கீ.சு.சமீரன் ஜப்பானுக்கான இந்திய தூதரகத்தின் முதன்மை செயலாளர் சத்யபால், மற்றும் மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் ஜான் டாம் வர்கீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News