செய்திகள்

செம்மொழிக்கு சிம்மாசனம் கொடுத்தவர் கருணாநிதி - கவிஞர் மேத்தா

Published On 2018-08-20 05:50 GMT   |   Update On 2018-08-20 05:50 GMT
மதுரையில் நடைபெற்ற கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில் பேசிய கவிஞர் மேத்தா, செம்மொழிக்கு சிம்மாசனம் கொடுத்தவர் கருணாநிதி என்று பெருமிதம் கொண்டார். #Karunanidhi
மதுரை:

முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதிக்கு புகழ் வணக்கம் செலுத்தும் வகையில் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் ‘முத்தமிழ் வித்தகர் கலைஞர்’ என்ற தலைப்பில் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தளபதி தலைமை தாங்கினார். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., தயாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

இதில் கலந்து கொண்ட கவிஞர் மு.மேத்தா பேசியதாவது:-


சங்கத்தமிழ் வளர்த்த மதுரையில் உதிரிப் பூக்களை தூவி கலைஞரை வணங்கினோம். கொஞ்ச நாளாக பேச, உண்ண, எழுத முடியவில்லை. இங்குள்ளவர்களை அவர் எப்படியோ ஒரு வகையில் மனதை தொட்டிருப்பார்.

ஒவ்வொரு தமிழனுக்கும், இந்தியாவில் அவரை அறிந்தவர்களுக்கும் அவரது அனுபவம் ஏராளம். ஒரு மொழிக்காக மூச்சு, பேச்சு உள்ளவரை கடைசி வரை போராடியவர். இங்கு வந்து எங்ககளை பேச வைத்தது மொழி என்றால் செம்மொழிக்கு சிம்மாசனம் கொடுத்தவர் அவர்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்டவர்கள், பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினார் கலைஞர்.

பெரியாருக்கு, அண்ணாவுக்கு இதயத்தில் இட ஒதுக்கீடு கொடுத்தார். எல்லாவற்றுக்கும் இட ஒதுக்கீடு கொடுத்தவருக்கு இட ஒதுக்கீடு செய்ய அரசு மறுத்தது.

கையை பற்றிக் கொண்டு வேண்டி கேட்டுக் கொண்ட மு.க.ஸ்டாலினிடம் மறுத்தனர். அந்த காரணத்தால் மு.க.ஸ்டாலின் கண் கலங்கினார்.

ஆனால் மறுநாள் நீதி தேவதையின் முழக்கம் நடந்தது. மு.க.ஸ்டாலின் கையை பற்றிக் கொண்டு ஏன் கேட்டார் என யோசித்த போது, இந்த ஆட்சியை நாளை கைப்பற்ற போகிறார் என்பது அர்த்தம்.

அண்ணாவின் இதயத்தை கலைஞர் கேட்டார். தந்தை வாங்கிய கடனை மகன் அடைக்க வேண்டும் அல்லவா. அதைத்தான் ஸ்டாலின் செய்தார்.

ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சியே அவரது வாழ்க்கையின் நோக்கமாக இருந்தது. அதை இந்த இயக்கத்தின் மூலம் சாதித்துக் காட்டினார்.

மேற்கண்டவாறு மு.மேத்தா பேசினார்.

பாடலாசிரியர் பா.விஜய், கவிஞர் அறிவுமதி, இலக்கியவாதிகள் கந்தசாமி, கலாப் பிரியா, வாசந்தி, சு.வெங்கடேசன், அருண்மொழி, ராமகிருஷ்ணன், இமயம், ஷாஜகான் ஆகியோரும் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தி பேசினார்கள். #Karunanidhi
Tags:    

Similar News