செய்திகள்

புதிய வரைவு திட்டத்துடன் மதுரவாயல் பறக்கும் சாலை பணிகள் விரைவில் தொடங்கும்

Published On 2018-08-17 08:38 GMT   |   Update On 2018-08-17 08:38 GMT
புதிய வரைவுத் திட்டத்துடன் மதுரவாயல் பறக்கும் சாலை பணிகள் விரைவில் தொடங்கும் என்று சென்னை துறைமுக தலைவர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
திருவொற்றியூர்:

சென்னை துறைமுக வளாகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் அவர் பேசியதாவது:-

துறைமுகத்தின் வளர்ச்சிக்கு பெருமளவு உதவிகரமாக இருக்கும் மதுரவாயல் உயர்நிலை மேம்பால திட்டம் (பறக்கும் சாலை) கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டு பணிகள் நடந்து வந்தன. பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த மத்திய-மாநில அரசுகள் முடிவெடுத்துள்ளதையடுத்து சீரமைக்கப்பட்ட புதிய வழித்தடத்தில் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான புதிய விரிவான வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஈடுபட்டு வருகிறது.

இந்த பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மீண்டும் பாலப்பணிகள் தொடங்கும்.

கடந்த நிதியாண்டில் 51.88 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டுள்ள சென்னை துறைமுகம் சுமார் ரூ. 953 கோடி மொத்த வருவாய் ஈட்டியுள்ளது.

நடப்பு ஆண்டில் ஜூலை மாதம் வரை சுமார் 18 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. மேலும் 10 ஆண்டுகளுக்கு கார்களை சென்னை துறைமுகம் மூலம் ஏற்றுமதி செய்ய ஹூண்டாய் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #Maduravoyal #Flyover
Tags:    

Similar News