செய்திகள்

லாரி ஸ்டிரைக் ஆதரவு - முட்டை கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு

Published On 2018-07-18 07:24 GMT   |   Update On 2018-07-18 07:24 GMT
லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக முட்டை கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். #LorryStrike

நாமக்கல்:

தமிழ்நாடு முட்டை கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் நாமக்கல்லில் இன்று நிரூபர்களிடம் கூறியதாவது:-

நாமக்கல்லில் இருந்து தற்போது வரை சத்துணவுக்கு முட்டை அனுப்பப்பட்டு தான் வருகிறது. இனிவரும் காலங்களில் சத்துணவுக்கு முட்டை சப்ளை செய்ய பண்ணையாளர்கள் தயாராக உள்ளோம். மாவட்ட நிர்வாகம் மூலம் சத்துணவுக்கான முட்டைகளை தமிழக அரசு பண்ணையாளர்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்தால் கிருஷ்டி நிறுவனத்தைவிட முட்டை விலையை குறைத்து தர முடியும்.

கடந்த 4 ஆண்டுகளாக கிருஷ்டி நிறுவனம் பண்ணையாளர்களுக்கு நல்ல முறையில் எந்தவித தடையும் இல்லாமல் முட்டை கொள்முதல் செய்ததற்கான பணம் வழங்கி வருகிறது. நேற்றைய தேதி வரை பண்ணையாளர்களுக்கு கிருஷ்டி நிறுவனத்தில் 31 கோடி ரூபாய் நிலுவை தொகை உள்ளது. இதில் 11 கோடி ரூபாய் நீண்ட கால நிலுவைத் தொகை. வருமான வரித்துறையினரின் சோதனையினால் தான் கிருஷ்டி நிறுவனத்தால் நிலுவை தொகை வழங்க முடியவில்லை என கருதுகிறோம்.

லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறோம். முதல் 2 நாட்கள் மட்டும் தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு முட்டைகளை அனுப்பாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.  #LorryStrike

Tags:    

Similar News