செய்திகள்

கனமழை எதிரொலி: வால்பாறையில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை

Published On 2018-07-09 05:12 GMT   |   Update On 2018-07-09 05:12 GMT
கனமழை காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை கோவை மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் பிறப்பித்துள்ளார்.
வால்பாறை:

கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழைபெய்து வருகிறது. கோவையில் லேசான மழை பெய்தது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த மாதம் தொடர் மழை பெய்தது. இந்த மழையால் தேயிலை தோட்டங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது.

கடந்த ஒரு மாதமாக பெய்த கனமழை காரணமாக வால்பாறையில் உள்ள சோலையார் அணை நிரம்பியது. கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அணை முழு கொள்ளளவான 160 அடியை எட்டியது.

இந்த அணையில் இருந்து மின் உற்பத்திக்காக மின் நிலையம் 2-க்கு வெளியேற்றப்படும் தண்ணீர் கேரள மாநிலத்திற்கு செல்கிறது.

இதே போல் பிரத்யேக வழியில் பரம்பிக்குளம் அணைக்கும் நீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த சில நாட்களாக வால்பாறை பகுதியில் மழை ஓய்ந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி முதல் கனமழை பெய்ய தொடங்கியது. இரவிலும் மழை பெய்தது. இந்த மழை இன்று காலை வரை நீடித்தது.

கனமழை காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை கோவை மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் பிறப்பித்துள்ளார். கோவையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

ஊட்டியில் நேற்று மாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

அவர்கள் சாரல் மழையில் குடை பிடித்தவாறு சுற்றுலா தலங்களை பார்வையிட்டனர். ஊட்டியில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. லேசான சாரல் மழையும் பெய்தது.
Tags:    

Similar News