செய்திகள்

ரூ.50 லட்சம் பறிப்பு- பள்ளி தாளாளரை கடத்திய நடிகர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2018-03-19 08:26 GMT   |   Update On 2018-03-19 08:26 GMT
வாணியம்பாடியில் பள்ளி தாளாளரை கடத்தி ரூ.50 லட்சம் பறித்த துணை நடிகர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வேலூர்:

வாணியம்பாடி ஆசிரியர் நகரில் வசிப்பவர் செந்தில் குமார் (வயது 42). தனியார் மெட்ரிக் பள்ளி தாளாளர். இவர், ஜனவரி மாதம் 19-ந் தேதி காலை நடைபயிற்சி சென்றபோது, காரில் வந்த ரவுடி கும்பல் ரூ.3 கோடி கேட்டு கடத்தியது.

இதையடுத்து, தருமபுரி மாவட்டம் காரியமங்கலம் தேசிய நெடுஞ்சாலை அருகே கடத்தல் கும்பலிடம் ரூ.50 லட்சம் கொடுத்து செந்தில் குமாரை அவரது அண்ணன் மீட்டார்.

விசாரணையில், செந்தில்குமாரின் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த வாணியம்பாடியை சேர்ந்த பிரியா என்பவரின் கணவரும், சினிமா நடிகருமான ஹரி என்கிற ஹரிஹரன் கூலிப்படை மூலம் பணம் பறித்தது தெரியவந்தது.

நடிகர் ஹரி, அஜீத் நடித்த ‘என்னை அறிந்தால்’ படம், முனியாண்டி, விலங்கியல் 3-ம் ஆண்டு உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். என்னை அறிந்தால் படத்தில் போலீஸ் வேடத்தில் நடிகர் அஜித்துடன் சேர்ந்து கடத்தல் கும்பலை சுற்றி வளைத்து பிடிக்கும் வேடத்தில் ஹரி நடித்துள்ளார்.

போலீசார் நெருங்கியதை தெரிந்துக் கொண்ட நடிகர் ஹரி, சென்னை ஜார்ஜ் டவுண் கோர்ட்டில் சரண் அடைந்தார். இந்த வழக்கில் பள்ளி தாளாளரை கடத்தி பணம் பறித்த ரவுடிகளான சென்னை செங்குன்றம் (ரெட் ஹில்ஸ்) பகுதியை சேர்ந்த கலீல் இப்ராகிம் (32), உதயகுமார் (35) மற்றும் சென்னை கொடுங்கையூரை சேர்ந்த முத்து (24) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

இந்த 3 ரவுடிகளும் ஜாமீனில் வரமுடியாத பிணையில் 2 நாட்களுக்கு முன்பு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். பள்ளி தாளாளர் கடத்தலில் முக்கிய குற்றவாளியான நடிகர் ஹரியையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ராமனுக்கு எஸ்.பி. பகலவன் பரிந்துரை செய்தார். அதன்படி, நடிகர் ஹரியும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். #tamilnews
Tags:    

Similar News