செய்திகள்

ரெயில் நிலையத்தில் டிக்கெட் கொடுக்க ஆள் இல்லாததால் 500 பயணிகள் ஓசி பயணம்

Published On 2017-11-01 05:35 GMT   |   Update On 2017-11-01 05:35 GMT
ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் டிக்கெட் கொடுக்க ஆள் இல்லாததால் 500 பயணிகள் ஓசி பயணம் செய்தனர்.
ராமேசுவரம்:

ராமேசுவரம் ஆன்மீக பூமியாக திகழ்கிறது. இங்குள்ள ராமநாதசாமியை தரிசிக்க வடமாநிலங்களில் இருந்து ஏராளமான பயணிகள் வருகிறார்கள்.

பயணிகளின் வசதிக்காக மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு தினமும் பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் எப்போதும் பயணிகள் கூட்டம் அலைமோதும்.

வழக்கம் போல் இன்று அதிகாலை 5.30 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து பயணிகள் ரெயில் மதுரைக்கு புறப்பட தயாரானது. 5 மணி அளவில் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில் நிலையத்துக்கு வந்தனர்.

தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு டிக்கெட் எடுப்பதற்காக டிக்கெட் கொடுக்கும் இடத்திற்கு சென்றனர். கவுண்டர் பூட்டிக்கிடந்தது.

ரெயில் புறப்பட சிறிது நேரம் தானே இருக்கிறது. டிக்கெட் எடுக்க வேண்டுமே என்று தவித்தனர். உடனே ஸ்டேசன் மாஸ்டரிடம் சென்று கேட்டனர். அவர் “சற்று பொறுங்கள், விரைவில் வந்து விடுவார்” என்றார். பயணிகளும் பொறுமையாக காத்திருந்தனர். டிக்கெட் கொடுப்பவர் வந்தபாடில்லை.

ரெயில் புறப்படும் நேரம் வந்ததும் ஹாரன் ஒலித்தது. பயணிகள் அனைவரும் டிக்கெட் எடுக்காமலே ரெயிலில் ஏறி அமர்ந்து தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.

சென்னையில் இருந்து ராமேசுவரம் வரும் சேது எக்ஸ்பிரஸ் வழக்கமாக அதிகாலை 4.30 மணிக்கு வந்து சேரும்.

இன்று கல்லல் என்ற இடத்தில் ரெயில் வந்தபோது மாடு குறுக்கே பாய்ந்தது. அதன் மீது ரெயில் மோதியதால் என்ஜின் பழுதானது. தொடர்ந்து ரெயிலை இயக்க முடியவில்லை.

இது குறித்து உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து என்ஜின் பழுதை நீக்கினர். அதன் பின்னர் காலை 8.30 மணி அளவில் சேது எக்ஸ்பிரஸ் ராமேசுவரம் சென்று சேர்ந்தது.

Tags:    

Similar News