செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

Published On 2017-09-25 03:34 GMT   |   Update On 2017-09-25 03:34 GMT
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அங்கு குவிந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
பென்னாகரம்:

கர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அந்த அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

நேற்று முன்தினம் வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. நேற்று நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. 10 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் நேற்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தர்மபுரி மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்திருந்தனர். நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் உற்சாகம் அடைந்த சுற்றுலா பயணிகள் அருவிகளிலும், காவிரி ஆற்றிலும் குளித்து மகிழ்ந்தனர். மேலும் அங்குள்ள கடைகளில் மீன்கள் வாங்கி சாப்பிட்டனர்.

வேலைநிறுத்தம் காரணமாக ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்கப்படவில்லை. இதனால் பரிசல்களில் செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். சுற்றுலா பயணிகள் வருகையையொட்டி போலீசார், தீயணைப்பு படையினர், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இது நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 8 ஆயிரத்து 597 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

தண்ணீர் திறப்பைவிட அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் காலை நிலவரப்படி 80.19 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 80.74 அடியாக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News