செய்திகள்

உடுமலை வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து மோசடி: 2 பேர் கைது

Published On 2017-09-15 14:54 GMT   |   Update On 2017-09-15 15:03 GMT
உடுமலை வங்கியில் 28 பவுன் போலி கவரிங் நகைகளை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ளது பூலாங்கிணர். இங்கு தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கி இயங்கி வருகிறது. இதன் மேலாளராக உள்ளவர் ரவி.

இவர் உடுமலை போலீசில் புகார் அளித்தார். அதில் சுப்பிரமணி (வயது 40) என்பவர் 28 பவுன் போலி நகையை அடமானம் வைத்து ரூ. 4 லட்சத்து 30 ஆயிரத்து 200-ஐ மோசடி செய்து விட்டார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சுப்பிரமணியை பிடித்து விசாரணை நடத்தினர்.அப்போது ஆகஸ்ட் 28-ந்தேதி சுப்பிரமணி பேங்கிற்கு சென்றபோது நடராஜ் என்பவர் அறிமுகம் ஆனார்.

அப்போது தனக்கு இந்த வங்கியில் கணக்கு இல்லை. அவசரமாக நகை அடமானம் வைக்க வேண்டும். உங்கள் கணக்கில் அடமானம் வைத்து பணம் பெற்று தாருங்கள். அதற்கு கமி‌ஷனாக ரூ.1000 தருகிறேன் என்று கூறியுள்ளார்.

1000 ரூபாய் கமி‌ஷனுக்கு ஆசைப்பட்டு சுப்பிரமணி தனது கணக்கில் 28 பவுன் நகையை அடமானம் வைத்து பணம் பெற்று அதனை அந்த நபரிடம் கொடுத்தார்.

அதன்பின்னர் அடமானம் வைக்கப்பட்ட நகையை சோதனை செய்தபோது அதுபோலி என்று தெரியவந்தது. போலி நகை கொடுத்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தியபோது அவர் கோபிச்செட்டிபாளையம் அத்தாணி பகுதியை சேர்ந்த குருசாமி (52) என்பதும் அவர் நடராஜன் என்பது போலி பெயர் என்பதும் தெரியவந்தது.

அங்கு சென்ற தனிப்படை போலீசார் குருசாமியை கைது செய்தனர். அவரிடம் இருந்து பணத்தை முழுவதையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் விசாரணையில் குருசாமி ஏற்கனவே பவானி சாகர், தாராபுரம் பகுதிகளில் இதுபோன்று போலி நகையை அடமானம் வைத்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது தெரியவந்தது. நகையை அடமானம் வைக்க உடந்தையாக இருந்த சுப்பிரமணியும் போலி நகையை கொண்டு வந்த குருசாமியையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News