செய்திகள்

பழனியில் 7-ம் நூற்றாண்டு சப்த கன்னியர்கள் சிலைகள் கண்டுபிடிப்பு

Published On 2017-08-18 06:27 GMT   |   Update On 2017-08-18 06:27 GMT
பழனியில் 7-ம் நூற்றாண்டு சப்தகன்னியர்கள் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பழனி:

பழனி ஆயக்குடிபகுதியில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, வரலாற்று ஆய்வாளர்கள் கன்னிமுத்து, வாஞ்சிநாதன், பேராசியர் அசோகன் ஆகியோர் களஆய்வு மேற்கொண்டனர். அதில் ஆயக்குடியில் 7-ம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதுஆயக்குடி குமார நாயக்கன் குளத்தின் தெற்குக்கரை அருகே வயல் வெளியில் சப்தகன்னியர் சிலைகள் சிதைந்த நிலையில் கண்டறியப்பட்டது. சப்தகன்னியர் தொகுப்பு சிலையில் கடைசி 4 தெய்வங்களான வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி ஆகியவற்றை ஒரே பலகை கல்லில் வடிவமைத்துள்ளனர். சப்தகன்னி மார்களில் முதலில் உள்ள பிரம்மி, மகேஸ்வரி, கவுமாரி ஆகியோரின் உருவங்கள் கிடைக்கவில்லை. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிலைகளுக்கு அருகே பாறையில் உளியால் செதுக்கிய சுவடுகள் உள்ளன.

ஒரே கல்லில் 7 சிலைகளை வடிவமைக்கும்போது பலகை உடைந்திருக்க வேண்டும். அதனால் சிலைசெய்யும் பணியை கைவிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

வடிவியல் கோட்பாடு மூலம் ஆய்வு செய்ததில், வைஷ்ணவி, வராகி இடதுகையில் சங்குசக்கரமும், இந்திராணிக்கு கிரீட மகுடமும், புணூல் நடுஇடுப்பை சுற்றியுள்ள வடிவமைப்பும் உள்ளது. இதன்மூலம் சப்தகன்னியர் சிலை 7-ம் நூற்றாண்டு அதாவது 1300 ஆண்டுகள் பழமையானது என தெரியவந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News