செய்திகள்

புழல் சிறைக்குள் பாகிஸ்தான் கொடிகள் சிக்கியதால் பரபரப்பு

Published On 2017-06-17 03:37 GMT   |   Update On 2017-06-17 03:37 GMT
புழல் சிறைக்குள் பாகிஸ்தான் கொடிகள் சிக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் மூலம் கலவரம் ஏற்படுத்த திட்டமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செங்குன்றம்:

புழல் சிறைக்குள் நேற்று காலை ஜெயிலர் ஜெயராமன் மற்றும் சிறை காவலர்கள் சுரேஷ், கிளாட்சன், மாரிகண்ணன் ஆகியோர் ராட்சத சுவர் ஓரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அங்குள்ள உயர்மட்ட பாதுகாப்பு சிறை அருகே ரோந்து சென்ற போது, சுவர் ஓரமாக கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட அட்டை பெட்டி ஒன்று கிடப்பதை கண்டனர்.

அந்த பெட்டியில் மர்ம பொருட்கள் ஏதாவது இருக்குமோ? என சந்தேகம் அடைந்த ஜெயிலர் மற்றும் சிறை காவலர்கள், அந்த அட்டை பெட்டியை பிரித்து பார்த்தனர்.

அதில் பாகிஸ்தான் நாட்டு தேசிய கொடிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கொடி கம்பத்தில் ஏற்றப்படும் அளவு கொண்ட ஒரு தேசிய கொடியும், சட்டையில் குத்திக்கொள்ளும் அளவு கொண்ட 103 கொடிகளும் மற்றும் விலை உயர்ந்த ஒரு செல்போனும் அதில் இருந்தன.

இதுபற்றி உடனடியாக ஜெயிலர் ஜெயராமன், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இது தொடர்பாக புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, அந்த தேசிய கொடிகள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து விசாரித்து வருகிறார்.

புழல் சிறையில் உள்ள யாருக்கோ அந்த கொடிகள் மற்றும் செல்போனை வழங்குவதற்காக சிறைக்கு வெளியே இருந்து ராட்சத சுவரை தாண்டி வீசிய போது, தவறி சுவர் ஓரம் விழுந்து இருக்கலாம் என்று தெரிகிறது.

கைப்பற்றப்பட்ட செல்போன் ஐ.எம்.இ.ஐ. எண்ணை வைத்து அது யாருடையது? என்பதையும், சிறையில் உள்ள யாருக்காக அந்த செல்போனை வீசினார்கள்? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் எதற்காக பாகிஸ்தான் நாட்டு கொடிகளை சிறைக்குள் வீசினார்களா?, இதை வைத்து சிறைக்குள் கலவரம் ஏற்படுத்த திட்டமிட்டார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் புழல் சிறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News