செய்திகள்

செங்கம் அருகே கர்நாடக பஸ்-கார் மோதி விபத்து: டிரைவர் உள்பட 2 பேர் பலி

Published On 2017-04-28 06:35 GMT   |   Update On 2017-04-28 06:35 GMT
செங்கம் அருகே கர்நாடக பஸ்-கார் மோதியதில் 2 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்தவர்களை பொதுமக்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
செங்கம்:

பெங்களூருவை சேர்ந்தவர் லிங்கராஜ். இவர் தனது உறவினர்கள் மஞ்சுநாத், மற்றும் சஞ்சாம் ஆகியோருடன் மேல் மருவத்தூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதற்காக நேற்றிரவு காரில் புறப்பட்டார்.

காரை, திருவண்ணாமலை அடுத்த கலசப்பாக்கம் சாலையனூரை சேர்ந்த ரகு (வயது 28) என்ற டிரைவர் ஓட்டினார். பாண்டிச்சேரி- பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை கார் கடந்தது.

மேல்செங்கம் அருகே உள்ள கருமாங்குளம் என்ற இடத்தில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கார் வந்துக் கொண்டிருந்தபோது, டிரைவர் ரகுவுக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது கட்டுப்பாட்டை இழந்த கார், தாறு மாறாக ஓடியது.

அப்போது எதிரே திருநெள்ளாரில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற கர்நாடக அரசு சொகுசு பஸ் மீது கார் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் கார் முற்றிலும் நொறுங்கி உருக்குலைந்து சிதைந்தது.

கார் டிரைவர் ரகு சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். உடன் பயணித்த லிங்கராஜ் உள்பட 3 பேரும் நொறுங்கிய காருக்குள் சிக்கி படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அபய குரல் எழுப்பினர்.

இதையடுத்து, படுகாயம் அடைந்த 3 பேரையும் பொதுமக்கள் மீட்டு செங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே லிங்கராஜ் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 2-ஆக உயர்ந்தது.

மஞ்சுநாத், சஞ்சாம் ஆகிய மற்ற இருவரின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது. இதனால் மேல் சிகிச்சைக்காக அவர்கள் 2 பேரும், திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து, செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் நிர்மலா ஆகியோர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதற்கிடையே, அதிகாலை 3.30 மணிக்கு நேரிட்ட விபத்தில் பலியானவர் மற்றும் படுகாயமடைந்தவர்களை மீட்க செங்கம் போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் உடனடியாக வரவில்லை.

சுமார் 1½ மணி நேரம் தாமதமாக விடியற்காலை 5 மணிக்கு சம்பவ இடத்தில் இருந்து பலியானவரின் உடல் மீட்கப்பட்டு செங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீஸ் மற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவையின் அலட்சிய போக்கை கண்டித்த மக்கள், இதுபோன்று தாமதமாக செயல்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Similar News