செய்திகள்

பிளஸ்-2 தேர்வு முடிந்தும் விலையில்லா லேப்டாப் இன்னும் வழங்கவில்லை: மாணவர்கள் குற்றச்சாட்டு

Published On 2017-04-27 04:01 GMT   |   Update On 2017-04-27 04:01 GMT
பிளஸ்-2 தேர்வு முடிந்தும் விலையில்லா லேப்டாப் இன்னும் வழங்கவில்லை என்று மாணவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
சென்னை:

படிக்கும்போதே கம்ப்யூட்டர் பற்றி தெரிந்து கொள்வதற்கும், உயர் கல்வி படிப்பதற்கு வசதியாகவும் பிளஸ்-2 மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் (மடிக்கணினி) வழங்கும் திட்டத்தை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்தார். அதன்படி கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி இந்த திட்டத்தை அவர் தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-2 மாணவர்கள் அனைவருக்கும் விலையில்லா லேப்டாப் வழங்கப்பட்டு வந்தது. இந்த லேப்டாப் எல்காட் நிறுவன ஏற்பாட்டில் பள்ளிக்கல்வித்துறை மூலம் வழங்கப்படுகிறது.

இதன்படி கடந்த கல்வி ஆண்டு (2015-2016) வரை விலையில்லா லேப்டாப் வழங்கப்பட்டது. ஆனால் இந்த கல்வி ஆண்டில் (2016-2017) இதுவரை தமிழ்நாடு முழுவதும் மாணவ- மாணவிகள் யாருக்கும் விலையில்லா லேப்டாப் வழங்கப்படவில்லை என்று மாணவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

லேப்டாப் வழங்க எந்த நடவடிக்கையையும் அரசோ, பள்ளிக்கல்வித்துறையோ எடுக்கவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

இதுதொடர்பாக பிளஸ்-2 மாணவர்கள் சிலர் கூறியதாவது:-

நாங்கள் அனைவரும் ஏழைகள். லேப்டாப்பை அரசு விலை இன்றி வழங்கினால் தான் பயன்படுத்த முடியும். உயர் கல்வி படிக்க கண்டிப்பாக லேப்டாப் தேவை. எங்கள் பெற்றோரால் வாங்கித்தர முடியாது.

இதனால் உயர்கல்வி படிக்க முடியாத நிலை ஏற்படும். எனவே அரசு உடனே நடவடிக்கை எடுத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் வழங்க வேண்டும். இதேபோல் விலை இல்லா காலணிகள், புத்தகப்பைகளும் வழங்கப்படவில்லை. ஜெயலலிதா மறைந்து விட்டதால் இந்த திட்டங்களும் மறைந்துவிட்டதா?.

இவ்வாறு மாணவர்கள் தெரிவித்தனர். 

Similar News