செய்திகள்

கும்பக்கரை அருவியில் மூழ்கி சென்னை போலீஸ் ஏட்டு மகனுடன் பலி

Published On 2017-04-26 04:53 GMT   |   Update On 2017-04-26 04:53 GMT
கும்பக்கரை அருவியில் மூழ்கி சென்னை போலீஸ் ஏட்டு மகனுடன் பலியானார். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெரியகுளம்:

சென்னை திருவெற்றியூரை சேர்ந்தவர் அருள்நாதன். (வயது 44). சென்னை பூக்கடை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக இருந்தார். இவர் தனது குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார். அதன்படி மனைவி தேவி நாகம்மை, மகள் ஏஞ்சல், மகன் சாமுவேல்ராஜ் (9) மற்றும் உறவினர்களுடன் கொடைக்கானலுக்கு சென்றார்.

வரும் வழியில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவிக்கு குளிக்க சென்றனர். அருவியில் நீர்வரத்து இல்லாததால் அங்கு தடைவிதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அருள்நாதன் அதனையும் மீறி பின்வழியாக சென்று வேலியை தாண்டி மகன் சாமுவேல்ராஜூடன் அருவிக்கு சென்றார்.

அப்போது அங்கு தண்ணீரில் இறங்கினர். அது ஆழமான கஜம் பகுதி ஆகும். 2 பேருக்கும் நீச்சல் தெரியாததால் அருள்நாதன், சாமுவேல்ராஜூ தண்ணீரில் மூழ்கினர்.

நீண்ட நேரம் ஆகியும் 2 பேரும் வெளியே வரவில்லை. உடனே உறவினர்கள் அருவிக்கு சென்று பார்த்தனர். அப்போது தந்தை- மகன் 2 பேரும் தண்ணீரில் பிணமாக மிதந்தனர். இதனை பார்த்த அவரது மனைவி தேவி நாகம்மை கதறி துடித்தார். சத்தம் கேட்டு வனத்துறையினர் ஓடிவந்தனர். உடனே 2 பேர் உடலை மீட்டு பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News