செய்திகள்

நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வர அதிகாரம் இல்லை: வக்கீல்கள் வாதம்

Published On 2017-04-25 08:33 GMT   |   Update On 2017-04-25 08:33 GMT
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வர அதிகாரம் இல்லை என்று ஐகோர்ட்டில் வக்கீல்கள் வாதிட்டார்கள்.

சென்னை:

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளுக்கு அருகே 500 மீட்டர் தூரத்துக்கும் மதுபான கடைகள் இருப்பதை தடை செய்தும், அந்த கடைகளை அகற்றவேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கடந்த மார்ச் 31-ந் தேதி உத்தரவிட்டது.

அந்த உத்தரவில், பிற மாநிலங்களில் மதுபான கடைகளை தனியார் நடத்துகின்றனர். அதனால், அவர்கள் செப்டம்பர் மாதத்துக்குள் நெடுஞ்சாலைகளுக்கு அருகேயுள்ள மதுபான கடைகளை அகற்ற வேண்டும்.

ஆனால், தமிழகத்தில் மதுபான கடைகளை அரசே நடத்துவதால், நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டருக்குள் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனே அகற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இதன்படி, தமிழகத்தில் சுமார் நெடுஞ்சாலைகளுக்கு அருகேயுள்ள சுமார் 3 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன. இந்த கடை களை எல்லாம் ஊருக்குள் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தபோது, பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் இருந்து தப்பிப்பதற்காக, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை எல்லாம் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது.

அதாவது மாநகரங்கள், நகரங்களுக்குள் உள்ள நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர தமிழகு அரசு முடிவு செய்தது.

இதுகுறித்து அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களுக்கு, நகராட்சி நிர்வாக துறை ஆணையர் கடந்த 21-ந் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில், அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் நகரத்துக்குள் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை தங்கள் வசம் கொண்டு வருவது குறித்து 24-ந் தேதிக்குள் தீர்மானம் இயற்றி, அந்த தீர்மானத்தின் நகலை தனி நபர் மூலம் 25-ந் தேதிக்குள் (இன்று) என்னுடைய அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த உத்தரவு பத்திரிகைகளில் வெளியாகின. இந்த உத்தரவுக்கு அரசியல் கட்சிகள் எல்லாம் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி, தி.மு.க. நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி, பா.ம.க. சார்பில் வக்கீல் கே.பாலு ஆகியோர் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தி.மு.க. சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், கே.பாலு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.எல்.ராஜா ஆகியோர், ‘தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை, உள்ளாட்சி அமைப்புகளின் சாலைகளாக மாற்றுவதற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் இல்லை. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்யவேண்டும் என்பதற்காக இப்படி ஒரு உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

நெடுஞ்சாலைகளை மாநகராட்சி, நகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து விட்டால், மீண்டும் பழைய இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறந்து விடலாம் என்ற நோக்கத்தில் தமிழக அரசு இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்க நகராட்சி நிர்வாக ஆணையருக்கு அதிகாரம் இல்லை. நெடுஞ்சாலைகளை மாநகராட்சி, நகராட்சி சாலைகளாக மாற்றுவதற்கு, அந்த அமைப்புகளின் ஆணையர்களுக்கும் அதிகாரம் இல்லை’ என்று வாதிட்டார்கள்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அட்வகேட் ஜெனரல் ஆர்.முத்துகுமாரசாமி வாதிட்டார். மாநகரங்கள், நகரங்களுக்கு மத்தியில் தற்போது உள்ள நெடுஞ்சாலைகள் ஒரு காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டின் கீழ் தான் இருந்தது.

ஆனால், மத்திய அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தின் அடிப்படையில், இந்த சாலைகள் தேசிய மற்றும் மாநில நெடுஞ் சாலைகளாக மாற்றப்பட்டன. எனவே, தற்போது நகர் பகுதிக்குள் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை, மாநகராட்சி, நகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று வாதிட்டார்.

இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

Similar News