செய்திகள்

வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் பேரறிவாளனுக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை

Published On 2017-04-24 12:30 GMT   |   Update On 2017-04-24 12:31 GMT
வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பேரறிவாளனுக்கு இன்று மீண்டும் மருத்துவ பரிசோதனை நடந்தது.

வேலூர்:

வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி பேரறிவாளன் சிறுநீரக தொற்று நோய், மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு சிறுநீரக தொற்றுக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். தொடர்ந்து மருந்து சாப்பிட்டு வருகிறார்.

இதையடுத்து 6 மாதங்களுக்கு ஒரு தடவை மருத்துவ பரிசோதனை செய்ய டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.

கடந்த 10-ந் தேதி பேரறிவாளனுக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையளிக்கப்பட்டது.

இந்நிலையில் பேரறிவாளனுக்கு இன்று மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டுமென டாக்டர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து இன்று காலை 10.15 மணிக்கு டவுன் டி.எஸ்.பி. ஆரோக்கியம் தலைமையிலான துப்பாக்கி ஏந்திய போலீசார் பேரறிவாளனை அடுக்கம்பாறை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு சிறுநீரக தொற்று சம்பந்தமாக அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்ததும் 11.30 மணியளவில் பேரறிவாளன் மீண்டும் ஜெயிலுக்கு அழைத்து செல்லபட்டு அடைக்கப்பட்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயிலில் இருந்த சக கைதி ராஜேஷ் கண்ணா என்பவரால் இரும்பு கம்பி கொண்டு பேரறிவாளன் தாக்கப்பட்டார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது பேரறிவாளன் தலையில் 6 தையல்கள் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News