செய்திகள்

பள்ளி இறுதிநாளில் மோதல்: தலைமை ஆசிரியை - 4 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம்

Published On 2017-04-22 05:49 GMT   |   Update On 2017-04-22 05:49 GMT
ஊத்தங்கரை அருகே பள்ளி இறுதி நாள் தேர்வின் போது, பள்ளி ஆசிரியர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக, பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் 4 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த லக்கம்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 61 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். ஊத்தங்கரையை அடுத்த காட்டேரி கிராமத்தை சேர்ந்த நிர்மலா(வயது 42) என்பவர் தலைமை ஆசிரியையாகவும், திருவேங்கடம் (46), ரேவதி (35), சண்முக பிரியா (38), உதய சிவசங்கரி (28) ஆகியோர் ஆசிரியர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள்.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு லக்கம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் உதயசிவசங்கரி ஆசிரியையாக நியமிக்கப்பட்டார். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு, தன்னை தரக்குறைவாக பேசுவதாக, தலைமை ஆசிரியை உள்பட நான்கு ஆசிரியர்கள் மீதும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம், ஆசிரியை உதயசிவசங்கரி புகார் செய்தார். முதன்மை கல்வி அலுவலர் அனைவரையும் ஒற்றுமையாக இருக்கும்படி கூறி விட்டு சென்றார்.

இந்த நிலையில் நேற்று பள்ளியில் இறுதிநாள் தேர்வு நடந்தது. பள்ளிக்கு ஆசிரியை உதயசிவசங்கரி தாமதமாக வந்ததால், தலைமை ஆசிரியை நிர்மலா, எட்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வினாத்தாள்களை வழங்கி தேர்வு எழுத ஏற்பாடு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை உதயசிவசங்கரி, நான் இல்லாமல் எனது வகுப்பு மாணவர்களுக்கு எப்படி தேர்வு நடத்தலாம் என வாக்குவாதம் செய்தார். பின்னர் வாக்குவாதம் கைகலப்பாக மாறி, தலைமை ஆசிரியை நிர்மலா மற்றும் ஆசிரியை உதயசிவசங்கரி ஆகியோர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக தெரிகிறது. அவர்களை சமாதானம் செய்ய வந்த ஆசிரியர்கள் திருவேங்கடம், ரேவதி, சண்முகப்பிரியா ஆகியோரையும் உதயசிவசங்கரி தாக்கினார். அதனால் உதயசிவசங்கரியை மற்ற ஆசிரியர்கள் ஒன்றாக சேர்ந்து தாக்கினார்கள். ஆசிரியர்கள் சண்டையால் பள்ளி மாணவ, மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த அப்பகுதி மக்கள் பள்ளியில் குவிந்தனர். சாதி பெயரை சொல்லி தன்னை சக ஆசிரியர்கள் அடிப்பதாக ஆசிரியை உதயசிவசங்கரி பொதுமக்களிடம் கூறினார். இதையடுத்து நான்கு ஆசிரியர்களையும் அறையில் வைத்து அடைத்து விட்டு பள்ளிக்கு பொதுமக்கள் பூட்டு போட்டனர். மேலும் ஆசிரியை உதயசிவசங்கரியை ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ஜூனன், தாசில்தார் தண்டபாணி, இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) பாபு, ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியை நிர்மலா, ஆசிரியர்கள் திருவேங்கடம், ரேவதி, சண்முகப்பிரியா, உதயசிவசங்கரி ஆகிய 5 பேரையும் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். உதயசிவசங்கரி கொடுத்த புகாரின் பேரில், ஊத்தங்கரை போலீசார் நான்கு ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதே போல தலைமை ஆசிரியை நிர்மலா, ஆசிரியை உதய சிவசங்கரி மீது போலீசில் புகார் செய்துள்ளார். அதன் பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News