செய்திகள்

பெண்ணின் கன்னத்தில் அறைந்த திருப்பூர் ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜனிடம் விரைவில் விசாரணை

Published On 2017-04-20 06:52 GMT   |   Update On 2017-04-20 06:53 GMT
மதுக்கடை எதிர்ப்பு போராட்டத்தில் பெண்ணின் கன்னத்தில் அறைந்த திருப்பூர் ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன், பல்லடம் தாசில்தார் சாந்தி, மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரிடம் விசாரணை விரைவில் நடைபெற உள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பகுதியில் கடந்த 11-ந் தேதி டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் மறியல் போராட்ம் நடத்திய போது திருப்பூர் ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன் தலைமையில் வந்த போலீசார், தடியடி நடத்தினர்.

இதில் ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன், அய்யம்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

இந்த சம்பவத்துக்கு பல்வேறு கட்சியினரும், அமைப்புகளும், பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

தடியடி சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு அதிகாரிகளாக வருவாய் துறை சார்பில் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, மற்றும் காவல் துறை சார்பில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரம்யா பாரதி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் வருவாய் துறை சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, சாமளாபுரம் தடியடி சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதல்கட்டமாக தடியடி சம்பவத்தின் போது பணியில் இருந்த பல்லடம் டி.எஸ்.பி. மனோகரன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ஆகியோரிடம் மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை நடத்தினார்.

நேற்று 2-வது கட்டமாக பல்லடம் தாலுகா அலுவலகத்தில் வைத்து மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி விசாரணை நடத்தினார்.

இதையொட்டி ஏ.டி. எஸ்.பி. தாக்கியதில் காயம் அடைந்த ஈஸ்வரி உள்பட சம்மன் அனுப்பப்பட்ட 14 பேரிடம் விசாரணை நடத்தினார். மேலும் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த, பொதுமக்கள் 8 பேரிடமும் அவர் விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில் தடியடி சம்பவத்தின் விசாரணை அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.

ஈஸ்வரியை கன்னத்தில் அறைந்த ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன், பல்லடம் தாசில்தார் சாந்தி, மற்றும் சாமளாபுரம் வருவாய் ஆய்வாளர், மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரிடம் விசாரணை விரைவில் நடைபெற உள்ளது. இவர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி விசாரணை நடத்த உள்ளார்.

இதற்கிடையே தடியடி சம்பவம் தொடர்பாக டி.ஜி.பி. உத்தரவின் பேரில் போலீஸ் தரப்பில் சிறப்பு விசாரணை அதிகாரியான கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரம்யா பாரதியும் விசாரணை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News