செய்திகள்

நீலகிரி, வால்பாறையில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது

Published On 2017-04-17 10:34 GMT   |   Update On 2017-04-17 10:35 GMT
நீலகிரி மற்றும் வால்பாறையில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியதால் சுற்றுலா பயணிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் நேற்று மாலை திடீரென மழை கொட்டியது. ஊட்டி, நவ்டேல், தொட்டபெட்டா, மைநல்லா ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் இதனமான சீதோஷ்ணநிலை நிலவி வருகிறது. இந்த மழை சுற்றுலா பயணிகளை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.

தேயிலை மற்றும் மலைக்காய்கறிகளுக்கு இந்த மழை ஏற்றதாக உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். குடிநீர் தேடி அலையும் வனவிலங்குகளுக்கு போதுமானதாக இருக்கும் என்று வன உயிரின ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்று பகல் 12 மணிக்கு திடீரென கனமழை கொட்டியது. கோடை சீசனை அனுபவிக்க வந்த சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தவாறு நடனமாடினர். பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

வால்பாறையில் கடந்த 1 மாதமாக கடும் வறட்சி நிலவியது. வெப்பம் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக அவதிப்பட்டனர். தேயிலைச்செடிகள் வாடியது.

இந்நிலையில் வால்பாறை முழுவதும் பலத்த சூறாவளி காற்றுடன் நேற்று இரவு 9 மணி முதல் 11 மணி வரை கனமழை கொட்டி தீர்த்தது. சூறாவளி காற்றுக்கு மரங்கள் முறிந்து விழுந்தன. மானாம்பள்ளி பகுதியில் முறிந்து விழுந்து ராட்சத மரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வெயில் கொடுமையால் அவதிப்பட்ட மக்களுக்கு இந்த மழை ஆறுதலாக இருந்தது. கோடை மழை விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காட்டு தீ ஏற்படும் அபாயம் இருந்தது.

இந்த மழையால் காட்டு தீ ஏற்படுவது தவிர்க்கப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதேபோன்று அவினாசி சுற்று வட்டார பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதில் சேவூர், குட்டகம், கருவலூர், காளிபாளையம், எலச்சிபாளையம் பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து சேதமடைந்தது. 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

Similar News