செய்திகள்

விவசாயிகளுக்கு ஆதரவாக பந்த் நடத்த தி.மு.க.வுக்கு தகுதியில்லை: எச்.ராஜா

Published On 2017-04-17 08:42 GMT   |   Update On 2017-04-17 08:43 GMT
விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் பந்த் நடத்துவதற்கு தி.மு.க.வுக்கு தகுதியில்லை என பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
நாகர்கோவில்:

பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தி.மு.க. அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தியதாக அறிவித்துள்ளது. அவர்கள் நடத்தியது அனைத்துக்கட்சி கூட்டம் அல்ல. அவர்களது கூட்டணி கட்சிகள் இணைந்து நடத்திய கூட்டம். இந்த கூட்டத்தில் பாரதீய ஜனதா உள்பட பல்வேறு கட்சிகள் பங்கேற்கவில்லை. எனவே அது அனைத்துக்கட்சி கூட்டம் அல்ல.

அந்த கூட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் 25-ந் தேதி பந்த் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த பந்த் போராட்டம் தேவையற்றது. 2016-ம் ஆண்டு மத்திய அரசு பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டு திட்டத்தை அறிவித்தது. அனைத்து மாநிலங்களும் அந்த திட்டத்தை அமல்படுத்தின. ஆனால் தமிழகத்தில் மட்டும் அந்த திட்டம் அமல்படுத்தப்படவில்லை.

இதற்கு காரணம் என்ன? அந்த திட்டத்தை அமல்படுத்தி இருந்தால் விவசாயிகள் தற்கொலையை தடுத்து இருக்கலாம். மணல் கொள்ளையில் ஈடுபட்ட தி.மு.க.வுக்கு பந்த் நடத்த எந்த அருகதையும் கிடையாது.

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்து இருப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. தினகரன் இருக்கும் வரை சசிகலா அணிக்கு எதிர்காலமே கிடையாது. இரட்டை இலை சின்னம் பிரச்சினையில் சட்டம் தன் கடமையை செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News