செய்திகள்
திருச்செந்தூர் கடலில் எண்ணெய் படலம் போன்ற கழிவுகள் மிதப்பதை படத்தில் காணலாம்.

திருச்செந்தூர் கடலில் ‘திடீர்’ எண்ணெய் படலம்: அதிகாரிகள் ஆய்வு

Published On 2017-03-29 04:14 GMT   |   Update On 2017-03-29 04:14 GMT
திருச்செந்தூர் கடலில் மிதந்த ‘திடீர்’ எண்ணை படலம் நடுக்கடலில் கப்பலில் இருந்து கசிவு ஏற்பட்டு கலந்ததா? என்று தூத்துக்குடி துறைமுக அதிகாரிகள் இன்று ஆய்வு செய்ய உள்ளனர்.
திருச்செந்தூர்:

தமிழ்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-வது படை வீடாக திகழும் திருச்செந்தூருக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.

அவர்கள் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகில் உள்ள கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்வது வழக்கம். நேற்று மாலை 3 மணியளவில் திருச்செந்தூர் கடலில் திடீரென எண்ணெய் படலம் உருவானது.

அப்போது கடலில் ஆங்காங்கே கருப்பு நிறத்தில் எண்ணெய் படலம் மிதந்தவாறு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் கடலில் குளிக்க தயங்கினர்.

சில பக்தர்கள் எண்ணெய் படலத்தை பொருட்படுத்தாமல் கடலில் குளித்தனர். பெரும்பாலான பக்தர்கள் கடலில் குளிக்காமல் கோவில் நாழிக்கிணற்றில் குளித்து விட்டு சாமி தரிசனம் செய்தனர். கடலில் எண்ணெய் படலம் எவ்வாறு வந்தது? என்பது தெரியவில்லை.

நடுக்கடலில் சென்ற கப்பல் அல்லது விசைப்படகுகளில் இருந்து எண்ணெய், டீசல் போன்றவை கசிந்து வெளியேறி இருக்கலாம். அவை காற்றின் வேகத்தில் கடற்கரைக்கு அடித்து வரப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடற்கரையோரம் பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. அந்த ஆலைகளில் இருந்து ரசாயனம் கலந்த எண்ணெய் உள்ளிட்ட கழிவுநீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

கடலில் மிதக்கும் எண்ணெய் படலத்தால் மீன்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளதா? என்பது குறித்து தெரியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் கடலில் மிதக்கும் எண்ணெய் படலத்தை ஆய்வு செய்து அதனை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று காலை திருச்செந்தூர் கடலில் எண்ணெய் படலம் காணப்படவில்லை. மாறாக சுமார் 5 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கி காணப்பட்டது. வள்ளிக்குகை அருகே உள்ள கடற்கரை பகுதியில் மட்டும் லேசான எண்ணெய் படலம் காணப்பட்டது.

சென்னை போன்று நடுக்கடலில் கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டு கடலில் கலந்ததா? என தூத்துக்குடி துறைமுக அதிகாரிகள் இன்று ஆய்வு செய்ய உள்ளனர்.

இது குறித்து மணப்பாடு மீனவர்கள் கூறுகையில், ‘இது போன்ற கழிவுகள் மிதப்பு வழக்கமானதுதான். ஆண்டுக்கு ஒரு முறை இவ்வாறு மிதக்கும். இது ரசாயன கழிவோ, எண்ணெய் படலமோ இல்லை’ என்றனர்.


Similar News