செய்திகள்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4 மாதங்களுக்கு பிறகு முழு அளவில் மின்சார உற்பத்தி

Published On 2017-03-28 04:11 GMT   |   Update On 2017-03-28 04:11 GMT
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4 மாதங்களுக்கு பிறகு 5 எந்திரங்களும் இயக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் முழுமையாக மின்சார உற்பத்தி நடந்து வருகிறது.
தூத்துக்குடி:

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் முழு அளவில் மின்சார உற்பத்தி நடந்து வருகிறது.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 மின் உற்பத்தி எந்திரங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த எந்திரங்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டு மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு வந்தது.

கடந்த நவம்பர் மாதம் அனல்மின் நிலையத்தில் உள்ள 5 மின் உற்பத்தி எந்திரங்களும் இயங்கி வந்தன. அதன் பிறகு தொடர்ச்சியாக பழுது மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக மின்சார உற்பத்தி எந்திரங்கள் அடிக்கடி நிறுத்தப்பட்டன. அனைத்து எந்திரங்களும் ஒரே நேரத்தில் முழுமையாக இயக்க முடியாத நிலை இருந்து வந்தது.

இந்த நிலையில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் புதிய தலைமை என்ஜினீயராக நடராஜன் பொறுப்பேற்றார். அதன் பிறகு படிப்படியாக மின் உற்பத்தி எந்திரங்கள் பழுது நீக்கம் செய்யும் பணி விரைவுபடுத்தப்பட்டது. தொடர்ச்சியாக ஒவ்வொரு எந்திரமாக இயக்கப்பட்டது. நேற்று முன்தினம் 2-வது மின் உற்பத்தி எந்திரத்தை தவிர 4 எந்திரங்களும் இயங்கி வந்தன.

நேற்று மாலையில் 2-வது மின்சார உற்பத்தி எந்திரமும் இயக்கப்பட்டது. இதனால் சுமார் 4 மாதங்களுக்கு பிறகு அனல்மின் நிலையத்தில் உள்ள 5 எந்திரங்களும் இயக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் முழுமையாக மின்சார உற்பத்தி நடந்து வருகிறது.

இதுகுறித்து அனல்மின் நிலைய தலைமை என்ஜினீயர் நடராஜன் கூறும்போது, அனல் மின் நிலையத்துக்கு தேவையான தண்ணீர் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கல்குவாரிகளில் இருந்து பெறப்படுகிறது.

அனல்மின் நிலையத்தில் பயன்படுத்துவதற்கு உகந்த தண்ணீரா என்று பரிசோதனை செய்து, லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு மின்சார உற்பத்தி எந்திரங்கள் இயக்கப்படுகிறது.

தாமிரபரணி ஆற்றில் போதுமான தண்ணீர் இல்லாததால் தாமிரபரணி தண்ணீரை பெற இயலவில்லை. 4 நாட்கள் வரை மின்சார உற்பத்திக்கு தேவையான அளவு தண்ணீர் சேகரித்து வைக்கப்பட்டு உள்ளது. தற்போது 5 மின் உற்பத்தி எந்திரங்களும் இயங்குகிறது. இதனால் 1000 மெகாவாட்டுக்கு அதிகமாக மின் உற்பத்தி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News