செய்திகள்

இலங்கை பயணம் ரஜினிகாந்த் ரத்து செய்தது வரவேற்கத்தக்கது: நல்லகண்ணு

Published On 2017-03-26 08:15 GMT   |   Update On 2017-03-26 08:15 GMT
இலங்கை பயணம் ரஜினிகாந்த் ரத்து செய்தது வரவேற்கத்தக்கது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர் நல்லகண்ணு பேசியுள்ளார்.

விழுப்புரம்:

விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர் நல்லகண்ணு, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இந்த குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்திற்கு வறட்சி நிவாரண தொகை ரூ.2 ஆயிரம் கோடிதான் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அது போதுமானது அல்ல. கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும். ஜனநாயக முறையில் ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறாது என்பதால் நாங்கள் போட்டியிடவில்லை.

இலங்கை பயணத்தை ரஜினிகாந்த் ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்கது. கட்சியை தா.பாண்டியன் விமர்சித்ததாக பேசப்படு வது வதந்தி.

இந்தியா முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி படிப்பதில் ஆதிதிராவிட மாணவர்களும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் அதிக அளவில் வராமல் இருக்க பல சூழ்ச்சிகள் நடக்கிறது. அந்த மாணவர்கள் பல்வேறு விதத்தில் இழிவுபடுத்தப்படுகின்றனர். இதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். ஆதிதிராவிட மாணவர்களும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் மத்திய பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி படிக்க மத்திய அரசு உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.

கடலூரில் பாதாள சாக்கடைக்குள் இறங்கி வேலை செய்த 3 பேர் வி‌ஷ வாயு தாக்கி இறந்துள்ளனர். இப்படி பல சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. மனித கழிவுகளை கையால் அள்ளுவதை தடுத்து நிறுத்த சட்டம் உள்ளது. உயர்நீதி மன்றமும், உச்சநீதிமன்றமும் அந்த சட்டத்தை அங்கீகரித்து பல தீர்ப்புகளை வழங்கியுள்ளது. எனவே இந்த சட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News