செய்திகள்

தாமிரபரணி ஆற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும்: ஜவாஹிருல்லா

Published On 2017-03-25 08:20 GMT   |   Update On 2017-03-25 08:20 GMT
தாமிரபரணி ஆற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா பேசியுள்ளார்.

நெல்லை:

நெல்லை கிழக்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் பாளை மார்க்கெட் திடலில் இன்று நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் உஸ்மான்கான் தலைமை தாங்கினார். நிர்வாகி ஏர்வாடி பக்ருதீன், மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா, மாநில துணை தலைவர் ரிபாயி, த.மு.மு.க. மாநில செயலாளர் மைதீன்சேட்கான் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஜவாஹிருல்லா பேசும்போது கூறியதாவது:-

தாமிரபரணி ஆற்றில் இருந்து பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்குவதை கண்டித்தும், தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக் கோரியும், மணல் கொள்ளையை தடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

அணைகளில் உள்ள தண்ணீர் 45 நாட்களுக்கு மட்டுமே பயன்படும் அளவில் உள்ளது என்று நெல்லை மாவட்ட கலெக்டர் கூறினார். ஆனால் உபரி நீரை குளிர்பான ஆலைகளுக்கு வழங்குவதாக கூறுவது கண்டிக்கத்தக்கது. தாமிரபரணி ஆற்றில் மணல் எடுக்க நீதிமன்றம் 5 ஆண்டுகளுக்கு தடை விதித்தது. ஆனால் தொடர்ந்து நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் மாற்றப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் நியாயமான தேர்தல் நடைபெற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் சமூக ஆர்வலர் முகிலன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

நிர்வாகிகள் நயினார் முகமது, முகமது யாகூப், யூசுப், ஆசாத், பக்கீரப்பா, மில்லத் இஸ்மாயில், அப்பாஸ் கில்மி, ஜமால், அசன், ரிஸ்வான், ஜபதர் உள்பட ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Similar News