செய்திகள்

காதல் திருமணம் செய்த பிறகு வரதட்சணைக்காக மனைவிக்கு கருக்கலைப்பு: கணவர் கைது

Published On 2017-03-22 14:51 GMT   |   Update On 2017-03-22 14:51 GMT
காதல் திருமணம் செய்த பிறகு வரதட்சணை வாங்கி வராத ஆத்திரத்தில் மனைவிக்கு கருக்கலைப்பு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பழனி:

பழனி அருகில் உள்ள பெரியமொட்டனூத்து போதுப்பட்டியைச் சேர்ந்த துரைராஜ் மகள் வசந்தி (வயது 28). இவர் பழனி அருகில் உள்ள ஒரு கல்லூரியில் கடந்த 2010-ம் ஆண்டு பி.காம் படித்து வந்தார். அதே கல்லூரியில் கீரனூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த சாகுல் அமீது மகன் முகமது சதாம் உசேன் என்பவரும் படித்து வந்தார். இருவரும் காதலித்து வந்தனர்.

வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் சதாம் உசேன் கடந்த 2011-ம் ஆண்டு வசந்தியை அழைத்துக் கொண்டு பெங்களூருவில் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவரும் ஈரோட்டுக்கு வந்து வேலை பார்த்துள்ளனர்.

தன் மகளை காணவில்லை என்று துரைராஜ் சாமிநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் ஈரோட்டில் இருந்து அவர்களை அழைத்து வந்து விசாரித்தனர். ஆனால் வசந்தி கணவருடனே செல்ல விரும்புவதாக கூறினார். அதன் பிறகு சதாம் உசேனின் பெற்றோர் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று வசந்தியை தங்கள் மதத்துக்கு மாற்றி வகீதாபானு என்று பெயர் மாற்றினர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் கோவையில் வசித்து வந்தனர். சதாம் உசேன் வேலைக்கு செல்லாமல் மனைவியை மட்டும் வேலைக்கு அனுப்பினார். அப்போது தனது பெற்றோரின் பேச்சைக் கேட்டு 50 பவுன் நகை, ரூ.5 லட்சம் வரதட்சணை வாங்கி வரச் சொல்லி மனைவியை கொடுமைப்படுத்தியுள்ளார். அவர் அதற்கு சம்மதிக்காததால் கர்ப்பிணி என்றும் பாராமல் அடித்து உதைத்து கருக்கலைப்பு செய்தார். 4 முறை கருக்கலைப்பு நடந்ததால் மனம் உடைந்த வசந்தி தற்கொலைக்கு முயன்றார். அதன் பிறகு குணமடைந்து கோதை மங்கலத்தில் உள்ள தனது சித்தி வீட்டுக்கு வந்தார்.

அங்கும் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்தனர். இது குறித்து பழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வசந்தி புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னக்கிளி வழக்கு பதிவு செய்து சதாம் உசேனை கைது செய்தனர். அவரது பெற்றோர் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

Similar News