செய்திகள்

பாலக்காட்டில் ரவுடிகள் தாக்கியதில் போலீஸ்காரர்கள் உள்பட 3 பேர் படுகாயம்

Published On 2017-03-20 11:22 GMT   |   Update On 2017-03-20 11:22 GMT
பாலக்காட்டில் ரவுடிகள் தாக்கியதில் போலீஸ்காரர்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் தெற்கு போலீஸ் கண்ட்ரோல் ரூமில் போலீஸ்காரர்களாக உள்ளவர்கள் மகேஷ் (வயது 32), அருண் (29). நேற்று இரவு போலீஸ்காரர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்றனர்.

வடக்கந்தரை என்ற இடத்தில் சென்றபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். குடிபோதையில் வந்த அவர்கள் போலீஸ்காரர்களின் மோட்டார் சைக்கிளை முந்திச்சென்றனர்.

முந்திச்சென்ற அவர்கள் தாறுமாறாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை ஓட்டினர். உஷாரான போலீசார் தாறுமாறாக ஓடிய மோட்டார் சைக்கிளை மடக்கிப்பிடித்தனர்.

குடிபோதையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஏன் வாகனத்தை ஓட்டுகிறீர்கள் என்று போலீசார் கேட்டனர். இதில் ஆத்திரமடைந்த வாலிபர்கள் போலீஸ்காரர்களை தாக்கினர். இதில் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

பொதுமக்கள் ஓடி வந்ததும் வாலிபர்கள் அங்கிருந்து தப்பினர். பின்னர் முத்தாந்தரை என்ற இடத்தில் அந்த வாலிபர்கள் சென்றபோது அந்த வழியே முன்னாள் நகர சபை உறுப்பினர் சபரி என்பவர் வந்தார்.

சபரிக்கும் வாலிபர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. ஆத்திரத்தில் இருந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்று சோடா பாட்டிலை எடுத்து முன்னாள் நகர சபை உறுப்பினர் சபரியின் தலையில் சோடா பாட்டிலால் அடித்தனர்.

அவருக்கும் தலைமையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து வாலிபர்கள் தப்பி விட்டனர். காயம் அடைந்த 2 போலீஸ்காரர்கள் மற்றும் சபரி ஆகியோரை பொதுமக்கள் மீட்டு பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விசாரணையில் பொதுமக்கள் கூறும்போது, தாக்குதலில் ஈடுபட்ட வாலிபர்கள் பல குற்றசம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகள் என்று கூறினர். அவர்கள் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் எண்ணை பொதுமக்கள் போலீசாரிடம் கொடுத்தனர். ரவுடிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Similar News