செய்திகள்

நந்தினி கற்பழித்து கொலை: சி.பி.சி.ஐ.டி. விசாரணை கேட்டு தந்தை மனு

Published On 2017-03-20 08:55 GMT   |   Update On 2017-03-20 08:55 GMT
நந்தினி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கேட்டு அவரது தந்தை அளித்த மனுவை விசாரித்த நீதிபதி, அரியலூர் போலீஸ் சூப்பிரண்டு பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
சென்னை:

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜகிளி. சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

என்னுடைய இளைய மகள் நந்தினி (வயது 16)கடந்த டிசம்பர் 29ந் தேதி காணாமல் போனார்.

எங்களது உறவினருக்கு தமிழரசன் என்பவர் போன் செய்து, நந்தினி என்னுடன் உள்ளார் என்று கூறியுள்ளார். இதுகுறித்து இரும்புலிக்குறிச்சி போலீசில் புகார் செய்தேன். ஆனால், என் புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்ய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மறுத்து விட்டார். தமிழரசன் என் மகளை கடத்திச் சென்றதாக புகார் மனுவில் குறிப்பிடக்கூடாது. மகளை காணவில்லை என்று மட்டும் குறிப்பிட வேண்டும் என்று என்னை அறிவுறுத்தினார்.

பின்னர் வெற்றுத்தாளில் என் கையெழுத்தை வாங்கி, அவர்களே புகாரை எழுதிக் கொண்டனர். இதற்கிடையில், இந்து முன்னணியை சேர்ந்த மணிகண்டன் உட்பட பலர் என் மகளை கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசாரிடம் கூறியபோது, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்கவாசல் திறப்பு விழாவுக்கு பாதுகாப்பு கொடுக்க செல்வதாக கூறி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விட்டனர்.

என் மகளை கடத்திச் சென்ற கும்பல் அவளை கற்பழித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், வழக்கை இழுத்து அடிக்கின்றனர். நான் புகார் கொடுத்த போதே போலீசார் விரைவாக நடவடிக்கை எடுத்திருந்தால், என் மகளை காப்பாற்றி இருக்கலாம். எனவே, நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்த அரியலூர் போலீஸ் சூப்பிரண்டு, துணைபோலீஸ் சூப்பிரண்டு, இரும்புலிக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். என் மகளை கற்பழித்து கொடூரமாக கொலை செய்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி. பெண் போலீஸ் துணை கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரிக்க உத்தரவிடவேண்டும்’

இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

இந்த மனு நீதிபதிஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

இன்று மனுவை விசாரித்த நீதிபதி, இந்தமனுவுக்கு அரியலூர் போலீஸ் சூப்பிரண்டு பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கின் இறுதி விசாரணைக்காக 2 வாரத்துக்கு தள்ளிவைக்கிறேன். அன்று இந்த வழக்கின் தீர்ப்பு பிறப்பிக்கப்படும்’ என்று உத்தரவிட்டார்.

Similar News