செய்திகள்

மும்பையில் ஏ.டி.எம். வேனில் ரூ.1½ கோடி கொள்ளை

Published On 2017-03-20 06:07 GMT   |   Update On 2017-03-20 06:07 GMT
மும்பையில் ஏ.டி.எம். வேனில் ரூ.1½ கோடி கொள்ளையடித்த ராம்ஜிநகர் கொள்ளையர்களை பிடிக்க மும்பை போலீசார் திருச்சியில் முகாமிட்டுள்ளனர்.

திருச்சி:

மும்பை தாராவி முகுந்த் நகரில் கடந்த 16-ந்தேதி பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்தில் பணத்தை நிரப்புவதற்காக ஒரு வேனில் ரூ.1 கோடியே 56 லட்சம் பணம் கொண்டு செல்லப்பட்டது.

அப்போது லாரி டிரைவரின் கவனத்தை திசை திருப்பி ஒரு கொள்ளை கும்பல் லாரியில் இருந்த ரூ.1 கோடியே 56 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய திருச்சியை சேர்ந்த ஆறுமுகம், சுப்பிரமணி, சுரேஷ்குமார், பாண்டு ரங்கன், கமலாநாகராஜ் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் திருச்சி ராம்ஜி நகரைச்சேர்ந்த மேலும் 9 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் தேடினர். அப்போது கொள்ளையர்கள் மும்பையில் இருந்து தப்பியது தெரிய வந்தது. அவர்கள் திருச்சி வந்து சொந்த ஊரான ராம்ஜிநகரில் பதுங்கியிருக்கலாம் என கூறப்பட்டது.

இதை தொடர்ந்து மும்பை போலீசார் நேற்று முன்தினம் விமானம் மூலம் திருச்சிக்கு வந்தனர். திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில் குமாருக்கு ராம்ஜிநகர் கொள்ளையர்கள் குறித்தும், மும்பை வங்கி பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்தும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் ராம்ஜிநகர் கொள்ளையர்களை சோமரசம்பேட்டை போலீசார் உதவியுடன் மும்பை போலீசார் ராம்ஜிநகரில் விசாரணை நடத்தினர். இதற்கிடையே போலீசார் வருவதை அறிந்ததும் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் தங்கள் வீடுகளை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து மும்பை போலீசார் திருச்சியில் முகாமிட்டுள்ளனர். மும்பை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுடைய உருவ படங்கள் அங்குள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது. அந்த காமிராவில் உள்ள நபர்கள் விபரத்தை மும்பை போலீசார் திரட்டியுள்ளனர்.

திருச்சி போலீசாருக்கு அவர்களின் புகைப்படத்தை அளித்துள்ளனர். அந்த புகைப்படத்தில் உள்ள நபர்கள் எங்காவது திருச்சியில் பதுங்கியுள்ளார்களா? என ராம்ஜி நகரில் உள்ள வீடுகளில் திருச்சி போலீசார் உதவியுடன் மும்பை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Similar News