செய்திகள்

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆதரவு: விக்கிரம ராஜா

Published On 2017-03-20 05:45 GMT   |   Update On 2017-03-20 05:45 GMT
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆதரவு என விக்கிரம ராஜா பேட்டியில் கூறியுள்ளார்.

சேலம்:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சேலத்தில் நடந்தது.

இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் திருமுருகன், மாவட்ட பொருளாளர் சந்திரதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் வர்கீஸ் அனைவரையும் வரவேற்றார்.

இதில் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடு முழுவதும் வரும் ஜூன் மாதத்தில் இருந்து ஜி.எஸ்.டி.வரி அமல்படுத்தப்பட உள்ளது. பொருட்களின் விலையினை பொருத்து 4 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை வரி விதிக்கப்படும். ஒவ்வொரு பொருட்களுக்கும் நிலையான வரி இருக்காது. இதனால் தமிழகத்தில் உள்ள 8 லட்சம் வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும் பொருட்களின் விலை உயரவும் வாய்ப்பு உள்ளதால் பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே ஜி.எஸ்.டி.வரியினை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

வருகிற மே மாதம் 5-ந்தேதி இந்திய வணிக வளர்ச்சி மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடக்கிறது. இதில் சேலத்தில் இருந்து 20 ஆயிரம் பேர் என மொத்தம் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள்.

தமிழகம் முழுவதும் நச்சு தன்மை வாய்ந்த குளிர்பானங்களின் விற்பனை 70 சதவீத கடைகளில் நிறுத்தப்பட்டுள்ளது. ஒப்பந்தம் செய்துள்ளதால் மீதமுள்ள 30 சதவீத கடைகளில் அடுத்த சில வாரங்களில் விற்பனை நிறுத்தப்படும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு முழு ஆதரவு அளிக்கும்.

தமிழக பட்ஜெட் தொடர்பாக வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படவில்லை. இதனால் இது உப்பு, உரைப் பில்லாத பட்ஜெட்டாக உள்ளது. ஆர்.கே.நகர் இடை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தகுதியை பார்த்து வியாபாரிகள் வாக்களிக்க வேண்டும்.

தரமில்லாத எண்ணெய், உணவு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களை விட்டு விட்டு, அதனை வாங்கி விற்பனை செய்யும் வணிகர்களின் மீது உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை எடுப்பது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு விக்கிரம ராஜா கூறினார்.

முடிவில் செய்தி தொடர்பாளர் இளையபெருமாள் நன்றி கூறினார்.

Similar News