செய்திகள்

விவசாய நிலத்தில் இறந்து கிடந்த 37 மயில்கள் வி‌ஷம் வைத்து கொல்லப்பட்டதா?

Published On 2017-03-20 04:47 GMT   |   Update On 2017-03-20 04:47 GMT
திருப்பூர் அருகே விவசாய நிலத்தில் இறந்து கிடந்த 37 மயில்கள் வி‌ஷம் வைத்து கொல்லப்பட்டதா? என்று வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை அடுத்த உகாயானூரில் விவசாய நிலத்தில மயில்கள் கூட்டமாக இறந்து கிடந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

வெங்காயம் மற்றும் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ள 5 ஏக்கர் நிலத்தில் மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் கிராம நிர்வாக அலுவலர் ரம்யா, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனவர் சுப்பையா, மகேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

அப்போது விவசாய நிலத்தின் அருகே உள்ள கிணற்றில் மட்டும் 10 மயில்கள் இறந்து கிடந்தன. மேலும் விவசாய நிலத்திலும் மயில்கள் ஆங்காங்கே கூட்டமாக இறந்து கிடந்தன. மொத்தம் 37 மயில்கள் இறந்து கிடந்தன.

இதுபற்றி வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் மயில்கள் இறந்து 5 நாட்கள் இருக்கும் என தெரிய வந்தது.

விவசாய நிலத்தில் வி‌ஷம் கலந்த தானியங்களை தின்றதால் மயில்கள் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் பரிசோதனைக்கு பின்னரே காரணம் தெரிய வரும் என வனத்துறையினர் கூறினர்.

இதுபற்றி வன ஆர்வலர்கள் கூறும் போது, ‘‘ வனவிலங்குகளை வி‌ஷம் வைத்தும், மின் வேலி அமைத்தும் கொல்லப்படுவது வேதனையளிக்கிறது. மயில்களை வி‌ஷம் வைத்து கொல்லப்பட்டது என தெரிய வந்தால் இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வனத்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Similar News