செய்திகள்

இந்திய கடல் எல்லையை தாண்டி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக்கூடாது: அதிகாரிகள் எச்சரிக்கை

Published On 2017-03-20 02:42 GMT   |   Update On 2017-03-20 02:42 GMT
இந்திய கடல் எல்லையை தாண்டி மீனவர்கள் யாரும் கண்டிப்பாக மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என மீன்வள துறை அதிகாரிகள் மூலம் எச்சரிக்கை அறிவிப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.
ராமேசுவரம்:

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 6-ந் தேதி மீன்பிடிக்க சென்ற மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொரு மீனவர் சரோன் படுகாயமடைந்தார்.

இந்தநிலையில் இலங்கை கடற்படையால் ராமேசுவரம் மீனவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு மீன்வள துறை அதிகாரிகள் மூலம் எச்சரிக்கை அறிவிப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.

அதில் ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கண்டிப்பாக முறையான அனுமதி டோக்கன் பெற்று தான் கடலுக்கு செல்ல வேண்டும். அதுபோல் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் அடையாள அட்டைகளை கண்டிப்பாக எடுத்து செல்ல வேண்டும் என்பதுடன் அதன் நகலையும், பெயர்களையும் மீன்பிடி டோக்கன் அலுவலகத்தில் கொடுத்து பதிவு செய்துதான் செல்ல வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி, சுருக்கு மடி வலைகளை வைத்து மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்லக்கூடாது. மேலும் இந்திய கடல் எல்லையை தாண்டி மீனவர்கள் யாரும் கண்டிப்பாக மீன்பிடிக்கச் செல்லக்கூடாது எனவும் எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மீன் துறை டோக்கன் அலுவலக வாசலில் உள்ள அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் ராமேசுவரம் துறைமுகம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் மீனவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டது. 

Similar News