செய்திகள்

கரூர் அருகே கள்ள நோட்டுக்களை மாற்ற முயன்ற வாலிபர் கைது

Published On 2017-03-18 12:57 GMT   |   Update On 2017-03-18 12:57 GMT
கரூர் அருகே 100 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

கரூர்:

திருச்சி மாவட்டம் முசிறி சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 35). இவர் இன்று காலை கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டி அண்ணாநகரை சேர்ந்த பாபு என்பவரின் மளிகை கடைக்கு சென்று 100 ரூபாய் கொடுத்து பொருட்களை வாங்கினார். அந்த ரூபாயை பாபு வாங்கி பார்த்த போது சந்தேகம் ஏற்பட்டது. கள்ளநோட்டாக இருக்கலாம் என்று எண்ணிய அவர் , இது குறித்து உடனடியாக அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமச்சந்திரனை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் பாபுவிடம் கொடுத்த பணம் கள்ளநோட்டுஎன்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த ரூ.10ஆயிரம் மதிப்பிலான 100ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவரது கூட்டாளிகள் 2பேர் தப்பியோடிவிட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் ராமச்சந்திரன் வேறு எங்கும் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்டாரா? அவரே இந்த ரூபாயை அச்சடித்தாரா?, அவருக்கு கள்ள நோட்டு கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

Similar News