செய்திகள்

ரூ. 3 கோடி மோசடி புகார்: நத்தம் விசுவநாதனுக்கு நிபந்தனை முன்ஜாமின்

Published On 2017-03-15 11:15 GMT   |   Update On 2017-03-15 11:15 GMT
ரூ.3 கோடி மோசடி புகார் வழக்கில் நத்தம் விசுவநாதனுக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் சபாபதி. இவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு செய்திருந்தார். அதில், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், கடந்த 2014-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்காக வாங்கிய பணத்தில் ரூ.2 கோடியே 97 லட்சத்து 90 ஆயிரத்து 700-ஐ திருப்பி வழங்கவில்லை எனவும், எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் முன் ஜாமீன் வழங்கக்கோரி முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் மனு தாக்கல் செய்தார். அதில், அ.தி.மு.க.வில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பிளவு காரணமாக என் மீது இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் பிரச்சனைகள் காரணமாக போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே இந்த வழக்கில் இருந்து எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு நேற்று நீதிபதி நிஷாபானு முன்பு விசாரணைக்கு வந்தபோது சபாபதி தரப்பினர் ஐகோர்ட்டில் ஆஜராகி தங்களையும் இந்த வழக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என கூறினர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி நிஷாபானு, முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை 15-ந்தேதிக்கு (இன்று) தள்ளிவைத்தார். அதுவரை போலீசார், நத்தம் விசுவநாதனை கைது செய்யவும் தடை விதித்தார்.

தொடர்ந்து இந்த வழக்கு இன்று நீதிபதி நிஷாபானு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நத்தம் விசுவநாதனுக்கு முன்ஜாமீன் வழங்க அரசு தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். மனுதாரர் (நத்தம் விசுவநாதன்) தரப்பில் ஆஜரான வக்கீல், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும் என குறிப்பிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிஷாபானு, நத்தம் விசுவநாதனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மறு உத்தரவு வரும் வரை திண்டுக்கல் டவுன் வடக்கு காவல் நிலையத்தில் வாரம் ஒரு முறை கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது.

Similar News