செய்திகள்

டி.டி.வி. தினகரன் பதவி ஏற்றது செல்லாது: முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி

Published On 2017-02-24 04:14 GMT   |   Update On 2017-02-24 04:15 GMT
அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் பதவி ஏற்றது செல்லாது என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
சென்னை:

சென்னை அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவருடைய ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2007-ம் ஆண்டு தினகரன் எம்.பி.யாக இருந்தபோது, அவர் தவறான வழியில் செயல்படுகிறார் என்று, அவரை டெல்லிக்கு செல்லக்கூடாது என ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து 10 ஆண்டுகளாக, அதாவது ஜெயலலிதா உயிர் துறக்கும் வரை அவர் இந்த திசையை திரும்பி பார்த்தது இல்லை.

2011-ம் ஆண்டு சசிகலா குடும்பத்தை ஜெயலலிதா வெளியேற்றிய போது அதில் தினகரனும் ஒருவர். எனவே அ.தி.மு.க.வுக்கும் தினகரனுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. அவர் பதவி (அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர்) ஏற்று இருப்பது அ.தி.மு.க.வை கட்டுப்படுத்தாது. செல்லாது. ஜெயலலிதா மறைவுக்கு மூல காரணமான சசிகலா மைனாரிட்டி ஆட்சியை கையில் வைத்துக்கொண்டு எல்லா வேலைகளையும் செய்கிறார். ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு சசிகலா குடும்பத்தினர் தான் முழு பொறுப்பு. போலீசார் நடுநிலையோடு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Similar News