செய்திகள்

நிதியமைச்சரானார் டி.ஜெயக்குமார் - அமைச்சரவையில் முதல் மாற்றம்

Published On 2017-02-23 12:49 GMT   |   Update On 2017-02-23 12:49 GMT
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கவனித்து வந்த நிதி இலாகாவானது, மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமாருக்கு ஒதுக்கீடு செய்து ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை:

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில் முதல் மாற்றமாக, முதல்வர் கவனித்து வந்த நிதித் துறையானது மீன்வளத்துறை அமைச்சராக உள்ள டி.ஜெயக்குமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், திட்டங்கள், நிர்வாக சீர்திருத்தங்கள் துறையும் ஜெயக்குமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


நிதித்துறை அமைச்சராக ஜெயக்குமார் பொறுப்பேற்றாலும், அவர் முன்னதாக கவனித்து வந்த மீன்வளத்துறை கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் எனவும் ஆளுநர் மாளிகையின் செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது. நிதி இலாகாவை கடந்த 2011-ம் ஆண்டு முதல் சில வாரங்களுக்கு முன்னர் வரை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த மாதம் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, புதிதாக நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஜெயக்குமார் பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News