செய்திகள்

தண்ணீர் வரத்து குறைந்ததால் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Published On 2017-02-23 12:22 GMT   |   Update On 2017-02-23 12:22 GMT
கும்பகரை அருவியில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்து விட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம்:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் சீசன் காலம் மட்டும் இல்லாமல் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும். இதனால் தினமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

இந்த அருவிக்கு கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்யும் மழைநீரே முக்கிய ஆதாரம். இந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்யாததால் அருவிக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. இந்நிலையில் கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கி விட்டதால் வறட்சி காரணமாக நீர்வரத்து மிகவும் குறைந்து விட்டது.

தற்போது சிறிதளவு தண்ணீரே அருவியில் விழுகிறது. வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் தேடி கும்பகரை அருவி பகுதிக்கு வருகிறது.

இதனால் சுற்றுலா பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், பார்வையிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோடை மழை பெய்து தண்ணீர்வரத்து அதிகரிக்கும் நிலையில் அருவிக்கு செல்லும் பாதை மீண்டும் திறக்கப்படும்.

Similar News