செய்திகள்

தமிழகத்தில் சீமைகருவேல மரங்களை அகற்ற மாணவர்கள் ஒன்று திரள வேண்டும்: வைகோ பேட்டி

Published On 2017-02-22 15:28 GMT   |   Update On 2017-02-22 15:28 GMT
சீமை கருவேல மரங்களை அழிக்க மாணவர்களும், இளைஞர்களும் ஒன்று சேர வேண்டும் என்று வைகோ கூறினார்.
நாகர்கோவில்:

குமரி மாவட்ட ம.தி.மு.க. தொண்டரணி அமைப்பாளர் சுமேஷ்-ஆன்சி வில்சன்  திருமண வரவேற்பு நிகழ்ச்சி  நாகர்கோவிலில் நேற்று நடந்தது.  இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார்.

முன்னதாக நிருபர்களுக்கு பேட்டியளித்த போது வைகோ கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளை தூர்வார வேண்டும் என்று தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து நான் வாதாடினேன். அதனைத் தொடர்ந்து பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளை தூர்வார உத்தரவிடப்பட்டது.

இந்த அணைகளில் தற்போது தண்ணீர் குறைவாக உள்ள நிலையில், அணைகளில் தூர்வாரும் பணியை அரசு மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் நீர் ஆதாரங்களை அழித்துக்கொண்டு இருக்கும் சீமை கருவேல மரங்களை அழிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் சீமை கருவேல மரங்கள் அழிக்கும் பணி பல இடங்களில் நடக்கவில்லை. எனவே சீமை கருவேல மரங்களை அழிக்க மாணவர்களும், இளைஞர்களும் ஒன்று சேர வேண்டும்.

சமூக வலை தளங்களில் என்னை தவறாக விமர்சனம் செய்கிறார்கள். இழிவாக பேசுகிறார்கள். கொடிய மிருகத்தின் உடலில் என் தலை இருப்பதுபோல சித்தரித்து கேலி செய்கிறார்கள்.

ஒரு வலைதளத்தில் என் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றையும் பதிவு செய்துள்ளனர். என் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு என்னிடம் தகாத வார்த்தைகள் பேசுகிறார்கள். இதற்காக நான் வருத்தப்படவில்லை. என்னை விமர்சிப்பதை விட்டுவிட்டு சமூக வலைதளங்களில் ஆக்கப்பூர்வமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துங்கள்.

முற்காலத்தில் கண்மாய்களில் வண்டல் மண்ணை வெட்டி எடுத்து அதை குப்பைகளின் மேல்கொட்டி இயற்கை உரம் தயாரித்து வந்தார்கள். ஆனால் தற்போது கண்மாய்களில் மண் எடுக்க அரசு அனுமதிப்பது இல்லை. மண் எடுக்க வேண்டும் என்றால் பணம் செலுத்த வேண்டியுள்ளது. எனவே இந்த கட்டுப்பாடுகளை தளர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தி.மு.க.வினர் உண்ணாவிரதம் அறிவித்திருப்பது ஜனநாயக உரிமை. தமிழகத்தில் மேலும் 500 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News