செய்திகள்

உடன்குடியில் கருப்பட்டி விலை திடீர் உயர்வு

Published On 2017-02-22 04:46 GMT   |   Update On 2017-02-22 04:46 GMT
உடன்குடியில் கருப்பட்டி விலை உயர்ந்துள்ளது. 10 கிலோ கொண்ட சிப்பம் என்ற கொட்டான் ரூ.2800-க்கு தற்போது விற்பனை செய்யப்படுகிறது.
உடன்குடி:

கருப்பட்டி உற்பத்தியில் உடன்குடி வட்டார பகுதிக்கு ஒரு சிறப்பு உண்டு. ‘உடன்குடி கருப்பட்டி’ என்ற ஊர் பெயரோடு ஊர், ஊராய் பவனி வரும். சென்னை, மும்பை, ஆந்திரா, கேரளா போன்ற பல வெளி மாநிலங்களில் தமிழர்களில் அதிகமாக வசிக்கும் ஊர்களில் உள்ள கடைகளில் “உடன்குடி கருப்பட்டி” இங்கே கிடைக்கும் என்று அறிவிப்பு போர்டு வைத்து விற்பனை செய்வார்கள்.

வருகிற ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தான் கருப்பட்டி உற்பத்தி தொடங்கும். அன்று புதிய கருப்பட்டிகள் கடைகளுக்கு விற்பனைக்கு வரும். அப்போதுதான் விலை குறைய வாய்ப்பு வரும். தற்போது கடந்த ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டும் உற்பத்தி செய்த கருப்பட்டிகள் விலை உயர்ந்து விட்டது.

10 கிலோ கொண்ட சிப்பம் என்ற கொட்டான் ரூ.2800-க்கு தற்போது விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.300-க்கும், 5 கிலோ என்ற ½ சிப்பம் வாங்கினால் ரூ.1400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பனை மரத்தில் ஏறி, பதனீர் தரும் பாளைகளை பக்குவப்படுத்தி, கூடுதலாக பதனீர் எடுக்கும் அளவிற்கு தொழில் தெரிந்த ஆட்கள் தற்போது இல்லை என்றும், பனை ஏறுவதற்கே ஆட்கள் கிடைப்பதில்லையே இவர்கள் தொழிலை எப்படி கற்று கொள்வார்கள் என்றும் இத்தொழிலில் ஈடுபட்டவர்கள் கூறுகின்றனர்.

இதனால் புதிய கருப்பட்டி உற்பத்தி விலை குறையாது என்று இத்தொழிலில் ஈடுபட்டவர்கள் கூறுகின்றனர்.

Similar News