செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் வரும் முன்னரே சட்டசபை தேர்தல் வரும் நிலை உள்ளது: மு.க.ஸ்டாலின் பேச்சு

Published On 2017-02-15 08:31 GMT   |   Update On 2017-02-15 08:31 GMT
உள்ளாட்சி தேர்தல் வரும் முன்னரே சட்டசபை தேர்தல் வரும் நிலை உள்ளது என கோவையில் மாற்று கட்சியினர் இணையும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

கோவை:

கோவை சின்னியம்பாளையம் டி.ஏ.ஆர். திருமண மண்டபத்தில் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் சுமார் 2500 பேர் தி.மு.க.வில் இணையும் விழா இன்று நடைபெற்றது. இதில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. சசிகலாவுக்கு தண்டனை வழங்கியுள்ளதால் இனி 10 ஆண்டுக்கு பதவிக்கு வர முடியாது. இது ஒன்றும் புதிய தீர்ப்பு அல்ல.

ஏற்கனவே பெங்களூர் கோர்ட்டில் நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை தான் சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது. கடந்த 21 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

இதன்மூலம் பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு நேர்மையும், தூய்மையும் மிக முக்கியம் என்பதை சுட்டி காட்டப்பட்டுள்ளது.

தற்போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் ஜெயலலிதாவும் குற்றவாளி தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவரை பற்றி பேசுவது நியாயமல்ல என்றாலும் கூட தீர்ப்பில் ஜெயலலிதாவை குறித்து கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு ஊழல் பணத்தை சம்பாதித்து கொடுத்தது சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தான் என கோர்ட்டு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது நிலையான ஆட்சி இல்லாத நிலை உள்ளது. அ.தி.மு.க.வில் நான் முதல்வர், நீ தான் முதல்வர் என 2 பிரிவாக செயல்பட்டு வருகிறார்கள், இதனால் அந்த கட்சி இரண்டாக உடைந்துள்ளது.

ஜெயலலிதாவுக்கு நீதிபதி குன்ஹா தண்டனை தீர்ப்பு வழங்கிய போது, இது தி.மு.க.வின் சதி என அ.தி.மு.க.வினர் அப்போது தெரிவித்தனர். மேலும் வன்முறையில் ஈடுபட்டனர்.

தற்போது இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு சசிகலாவுக்கு தண்டனை விதித்த பிறகு பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து வருகிறார்கள். பதவி சுகத்துக்காக இப்படி நடந்து வருகிறார்கள்.

விரைவில் உள்ளாட்சி தேர்தல் வருவதற்கு முன்னரே சட்டசபை தேர்தல் வரும் நிலை உள்ளது. எனவே நாம் தேர்தலை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் தற்போது நடைபெறும் அவல ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் தி.மு.க. தொண்டர்கள் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Similar News