செய்திகள்

சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும்பான்மை கிடைக்கும் - நவநீதகிருஷ்ணன் பேட்டி

Published On 2017-02-14 13:11 GMT   |   Update On 2017-02-14 13:11 GMT
ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ள சசிகலா அணியைச் சேர்ந்த அமைச்சர் எடப்படி பழனிச்சாமிக்கு சட்டசபையில் பெரும்பான்மை கிடைக்கும் என நவநீதகிருஷ்ணன் எம்.பி பேட்டியளித்துள்ளார்.
சென்னை:

சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்தது. இதனால், சசிகலா முதல்வராக பதவியேற்பதில் பெரிய தடை ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கலான சூழ்நிலையில் சசிகலா அணியில் உள்ள அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க.வின் சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இன்று மாலை ஆளுநரைச் சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, தங்களை ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரினார். ஆளுநர் சந்திப்பு முடிவடைந்த பின்னர் மீண்டும் கூவத்தூர் திரும்பினார். இந்நிலையில், சசிகலா அணியில் உள்ள ராஜ்ய சபா எம்.பி. நவநீத கிருஷ்ணன் கூவத்தூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சசிகலாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்வோம். எடப்பாடி பழனிச்சாமியை, ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் விரைவில் அழைப்பார் என எதிர்பார்க்கிறோம். அவருக்கு நிச்சயமாக சட்டசபையில் பெரும்பான்மை கிடைக்கும். அவர் பதவியேற்கும் வரை கூவத்தூரில் தான் தங்கியிருக்கிறோம். 

இங்கு வாகனம் மூலம் வரும் தண்ணீர், உணவுப் பொருட்களை போலீசார் தடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.  

இவ்வாறு கூறினார்.

Similar News