செய்திகள்
கொடைக்கானல் ஏரிச்சாலையில் படந்திருந்த உறைபனி

கொடைக்கானலில் உச்சகட்ட உறைபனி: பொதுமக்கள் தவிப்பு

Published On 2017-02-02 06:37 GMT   |   Update On 2017-02-02 06:37 GMT
கொடைக்கானலில் இன்று உச்சகட்ட உறைபனி நிலவியதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரிதும் சிரமத்துக்கு ஆளானார்கள்.
கொடைக்கானல்:

கொடைக்கானலில் இந்த வருடம் சராசரி மழை அளவு குறைவாகவே காணப்பட்டது. வருடந்தோறும் டிசம்பர் மாதம் கடுமையான பனி நிலவும். மழைக்கு பிறகு காணப்படும் இந்த பனியின் தாக்கம் இந்த வருடம் சற்று அதிகமாகவே இருந்தது. கடந்த 2 வாரத்துக்கு முன்பு கொடைக்கானலில் உறை பனி நிலவியது. அதன் பிறகு ஒரு சில நாட்கள் சாரல் மழை பெய்ததால் பனியின் தாக்கம் குறைந்தது. பகலில் கடும் வெயில் அடித்தாலும் பனியின் தாக்கம் குறையாமலேயே இருந்தது.

கடந்த சில நாட்களாக பெய்த மழைக்கு பிறகு கொடைக்கானல் நகரில் பனிப்பொழிவு அதிகரிக்கத் தொடங்கியது இன்று உச்சகட்ட உறை பனி நிலவியது. ஏரிச்சாலை, பூங்கா உள்பட அனைத்து பகுதிகளிலும் பனி போர்வை காணப்பட்டது. வீட்டில் இருந்து கதவை திறக்க முடியாதபடி பனிக்காற்று வீசியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.

வாகனங்களில் செல்வதிலும் சிரமம் ஏற்பட்டது. உறைபனி காரணமாக ஏரிச்சாலை இன்று மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த உறை பனி காரணமாக இனி கொடைக்கானலில் மழை பெய்யாது என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


Similar News