செய்திகள்

மு.க.ஸ்டாலின் தலைமையில் விரைவில் ஆட்சி அமைக்க சூளுரைப்போம்: கே.என்.நேரு பேச்சு

Published On 2017-01-27 11:43 GMT   |   Update On 2017-01-27 11:43 GMT
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் விரைவில் ஆட்சி அமைக்க சூளுரைப்போம் என்று திருவெறும்பூரில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில கே.என்.நேரு எம்.எல்.ஏ. பேசினார்.
திருவெறும்பூர்:

தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் மொழிப்போர் தியாகிகளின் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் தெற்கு ஒன்றியம் சார்பில் திருவெறும்பூரில் நடந்த பொது கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் நவல்பட்டு விஜி தலைமை தாங்கினார்.

நிர்வாகிகள் இலந்தை மாரிமுத்து, பட்டவெளி ராம் ராஜ், ராஜகோபால், விஜய குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழக கலாசாரத்தை தெரிந்து கொண்டு செயல்படும் அரசாக மத்திய, மாநில அரசுகள் இல்லை. அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த முடியவில்லை. அதை மாணவர்கள் போராடி பெற்றுக்கொடுத்துள்ளனர்.

6 அண்டுகளுக்கு முன்பு அ.தி.மு.க. வெற்றிப் பெற்றதும் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரியே இல்லை என்றார். ஆனால், அவர் இறந்து 30 நாட்களுக்குள் அந்த கட்சி இரண்டு கோஷ்டியாக பிரிந்துள்ளது. நீட் தேர்வு, உதய் மின்திட்டம், ஜி. எஸ்.டி. மசோதா ஆகியவற்றிற்கு ஜெயலலிதா ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் அவர் இறந்த 30 நாட்களுக்குள் மாநில அரசை மிரட்டி மத்திய அரசு பணிய வைத்து விட்டது இது நியாயமா.

காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்தப்போது நாரயணசாமி வரும் போதெல்லாம் கூடங்குளம் மின்திட்டம் கொண்டு வரப்படுமென்று கூறுவார். அதுபோல் பொன்.ராதா கிருஷ்ணன் ஜல்லிக்கட்டு நடக்கும் என்று சொல்லி வந்தார், நடக்கவில்லை. மாணவர்களின் போராட்டத்தால் தான் ஜல்லிக்கட்டு போட்டிக்கு சட்டம் கொண்டு வரப்பட்டது.

வெண்மணியில் 40 பேர் இறந்தது, சேலத்தில் 17 பேர் இறந்ததை நினைவு கூறும் அரசு 200 விவசாயிகள் இறப்புக்கு எதுவும் செய்யவில்லை. வறட்சி நிவாரண நிதியாக ஏக்கருக்கு ரூ.5 அயிரம் அறிவித்துள்ளது. ஆனால் அதுவும் வரவில்லை. இதுகுறித்து சட்டமன்றத்தில் கேட்டால் உங்களால் தான் என்று கூறுகிறார்கள்.

விரைவில் தி.மு.க. ஆட்சி அமையும். அதன் மூலம் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியும். நமக்கு நாமே திட்டத்தை கலைஞர் காட்டூரில் தான் தொடங்கி வைத்தார். மேலும் திருவெறும்பூர் வளர்ச்சி அடைந்த நகரமாக மாறியது தி.மு.க. ஆட்சி காலத்தில் தான். நாங்கள் எம்.எல்.ஏ.வாக இருந்தும் பொது மக்கள் குடிநீர் தேவைக்காக பைப்பு கூட போட முடியவில்லை. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறினால் அவர்கள் காலம் தாழ்த்தி வருகிறார்கள்.

முதியோர் உதவிதொகை பெறுவதற்கு தகுதி உடைய பயனாளிகள் குறித்து கணக்கு எடுத்து கொடுத்து விட்டோம், இருந்தும் இதுநாள் வரை எந்த பலனுமில்லை. திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை போட்டு தரவில்லை என்று தான் முன்னால் எம்.எல்.ஏ. சேகரனை 4 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தனர். ஆனால் 7 ஆண்டுகள் ஆகியும் ஒரு ஜல்லியையாவது அவர்களால் பரப்ப முடிந்ததா? மேலும் தி.மு.க. ஆட்சி காலத்தில் சர்வீஸ் சாலை போடுவதற்கு ஒதுக்கப்பட்ட நிதியையாவது அவர்களால் பெற முடிந்ததா.

30 ஆண்டுகளாக தி.மு.க.விற்கு ஓட்டு போடாத கிராம மக்கள் கூட தற்போது தி.மு.க.விற்கு தான் ஓட்டு போடுவோம் என்று கூறுமளவிற்கு மாறியுள்ளனர். வெகு விரைவில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சியமைக்க சூளுரைப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தலைமை கழக பேச்சாளர்கள் மார்‌ஷல் முருகன், மதுரை குருசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இதில் கட்சி நிர்வாகிகள் ராஜகோபால், விஜயகுமார், தனசேகர், அப்துல்குத்தூஸ், பன்னீர்செல்வம், நீலமேகம் பழனியப்பன், மாயழகு, சோம அரங்கராசன், துவாக்குடி நகர செயலாளர் காயாம்பு, நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் செல்வமணி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பெல் தொமுச பொதுச்செயலாளர் எத்திராஜ் ஒன்றிய அவைத்தலைவர் கங்காதரன் ஆகியோர் வரவேற்றனர். கட்சி நிர்வாகிகள் முருகா, கயல்விழி ஆகியோர் நன்றி கூறினர்.

Similar News