செய்திகள்

மேலூர் அருகே சீமான் தலைமையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது

Published On 2017-01-21 05:19 GMT   |   Update On 2017-01-21 05:19 GMT
மேலூர் அருகே சீமான் தலைமையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது காளைகளை அடக்கி வீரர்களுக்கும், பிடியில் சிக்காமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலூர்:

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றரன். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை தமுக்கம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் மதுரை மாவட்டம், மேலூர் அருகே அரட்டாபட்டியை அடுத்துள்ள கூழாணிப்பட்டியில் இன்று காலை சீமான் தலைமையில் மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், இளைஞர்கள் ஆகியோர் காளைகளுடன் கொட்டும் மழையில் திரண்டனர்.

அவர்கள் அங்கே வாடிவாசல் அமைத்து 70-க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்து விட்டனர். இதை அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் ஆரவாரத்துடன் விரட்டி சென்று பிடித்தனர்.

காளைகளை அடக்கி வீரர்களுக்கும், பிடியில் சிக்காமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் சீமான் பரிசு வழங்கினார்.

ஜல்லிக்கட்டு குறித்து மேலூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வருவதற்குள், ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மாடுகளுடன் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Similar News