செய்திகள்

அலங்காநல்லூரில் 3-வது நாளாக மாணவர்கள்- கிராமமக்கள் விடிய- விடிய போராட்டம்

Published On 2017-01-18 05:58 GMT   |   Update On 2017-01-18 05:58 GMT
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள்- கிராமமக்கள் 3-வது நாளாக இன்று போராட்டத்தை தொடர்ந்தனர். தொடர்ந்து பதட்டம் நீடிப்பதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அலங்காநல்லூர்:

ஜல்லிக்கட்டை இந்த ஆண்டு நடத்தியே தீர வேண்டும் என்று சிறிய தீப்பொறியாக கிளம்பிய போராட்டம், இன்று எரி மலையாக உருவெடுத்துள்ளது. தடியடி- கைது என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது, இளைஞர் கூட்டம் அதனை கண்டு பயப்படாமல் போராட்டத்தை தொடர்கின்றனர்.

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திடல் வாடிவசலில் 16-ந் தேதி காலை வந்த இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டை நடத்தும் வரை ஒயமாட்டோம் என உறுதி பூண்டனர். மாலையில் கலந்து சென்று விடுவார்கள் என கருதிய போலீசாருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இரவிலும் போராட்டம் நீடித்தது.

சென்னை, கோவை, நெல்லை மற்றும் புதுச்சேரி என பல பகுதிகளில் இருந்து சமூக வலை தளத்தின் மூலம் திரண்ட இளைஞகள் மாணவர்கள் கூட்டத்தின் உறுதியை கண்ட, அலங்காநல்லூர் மக்கள் அவர்களுக்கு இரவு உணவு அளித்தனர். மறுநாள் (நேற்று) காலை 6 மணிக்கு தர்ணாவில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்லாததால் முன்எச்சரிக்கை நடவடிக்கை கைது செய்யப்பட்ட னர்.

இதனை கண்டித்து அலங்காநல்லூர் கேட்டுக் கடை பகுதியில் கிராம மக்கள் மற்றும் பல்வேறு பகுதி மாணவ- மாணவிகள், இளைஞர்கள் திரண்டு தர்ணாவில் ஈடுபட்டனர். நேரம் செல்ல... செல்ல... இந்த போராட்டத்திற்கு ஆதரவு அதிகரித்து மக்கள் கூட்டம் கூடிக்கொண்டே இருந்தது.

நேற்று இரவிலும் இந்த தர்ணா நீடித்தது. சாலையின் நடுவே அமர்ந்திருந்தவர்கள், அங்கேயே படுத்து விடிய- விடிய போராட்டத்தை தொடர்ந்தனர். கொட்டும் பனியிலும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

கொட்டும் பனியையும், கொசுக்கடியையும் பொறுத்துக் கொண்டு போராடிய கூட்டம் மத்திய அரசு, ஜல்லிக்கட்டுக்கு உடனே அனுமதி வழங்க வேண்டும். இதற்கு மாநில அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். வாடிவாசல் வழியாக குறைந்தது 5 காளைகளை யாவது அவிழ்த்து விட்டு, ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும். இதற்காக மத்திய அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களும், சட்டமன்ற உறுப்பினர்கள் மூர்த்தி, மாணிக்கம், கருணாஸ், நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார், டைரக்டர்கள் சீமான், அமீர், நடிகரும் இசை அமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

இதற்கிடையே, வாடி வாசலில் கைது செய்யப்பட்டு, வாடிப்பட்டி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் நேற்று இரவு 11.30 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் அங்கிருந்து நேராக அலங்காநல்லூர் கேட்டுக் கடைக்கு வந்து தர்ணாவில் ஈடுபட்டவர்களோடு இணைந்தனர்.

இன்றும் (புதன்கிழமை) 3-வது நாளாக போராட்டத்தை இளைஞர்களும் மாணவர்களும் தொடர்ந்தனர். அவர்களுடன் காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் கிராம மக்கள் என பலரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இன்று போராட்ட களத்திற்கு மேலும் சில மாவட்டங்களில் இருந்தும் கல்லூரி மாணவர்கள் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த போராட்டம் காரணமாக அலங்காநல்லூர் பஸ் போக்குவரத்து 6-வது நாளாக நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் வாடிப்பட்டி பகுதியில் ஒரு சில இடங்களில் பஸ் மறியல் போராட்டத்தில் சிலர் இறங்கினர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர். இதனால் சிறிது நேரம் அந்தப்பகுதிகளில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

இந்த சூழலில் நேற்று இரவு திருப்பூர், தாராபுரம், கோவை பகுதிகளில் இருந்து மதுரை நோக்கி வந்த 3 அரசு பஸ்கள் மீது தனிச்சியம் அலங்காநல்லூர் பிரிவில் கற்கள் வீசப்பட்டன. இதில் அந்த பஸ்களின் பின்புற கண்ணாடிகள் உடைந்தன. அய்யங்கோட்டை பகுதியில் மதுரையில் இருந்து கோவை சென்ற அரசு பஸ் கண்ணாடி கல்வீசி உடைக்கப்பட்டது. இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அலங்காநல்லூர் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். வாடிவாசல் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Similar News