செய்திகள்
அரசு பஸ் தண்டவாளத்தில் சிக்கி நிற்பதை படத்தில் காணலாம்

ரெயில்வே கேட்டை கடந்தபோது தண்டவாளத்தில் நின்ற அரசு பஸ்

Published On 2016-12-29 10:59 GMT   |   Update On 2016-12-29 10:59 GMT
திருமங்கலம் அருகே ரெயில்வே கேட்டை கடந்தபோது தண்டவாளத்தில் நின்ற அரசு பஸ்சால் பதட்டம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் 3 ரெயில்கள் சுமார் 1½ மணிநேரம் தாமதமாக சென்றன.
பேரையூர்:

மதுரை மாவட்டம், திருமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை 7.30 மணிக்கு, அருகில் உள்ள தூம்பக்குளத்திற்கு அரசு டவுன் பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சை டிரைவர் திரவியம் ஒட்ட நடத்துனராக செல்லச்சாமி செயல்பட்டார்.

சுமார் 15 பயணிகளுடன் புறப்பட்ட இந்த பஸ், திருமங்கலம் - விருதுநகர் இடையே உள்ள பி.அரசபட்டி ரெயில்வே கேட் வழியாகதான் செல்ல வேண்டும். அந்த பகுதியில் தண்டவாளத்தை உயர்த்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் வழக்கத்தை விட தண்டவாளம் சற்று உயர்ந்து காணப்பட்டது.

காலை 7.45 மணியளவில் அங்கு வந்த பஸ், ரெயில்வே கேட்டை கடக்க முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக உயர்த்தப்பட்ட தண்டவாள பகுதியில் பஸ் மாட்டிக் கொண்டு நின்றது. உடனடியாக பயணிகளும், அப்பகுதி மக்களும் சேர்ந்து பஸ்சை அங்கிருந்து தள்ளி கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

அந்த நேரத்தில் 3 ரெயில்கள் அடுத்தடுத்து இந்த வழியாக செல்லவேண்டும் என்பதால் ரெயில்வே கேட் கீப்பர் செய்வதறியாது திகைத்தார். பஸ்சை அங்கிருந்து நகர்த்த முடியாததால், உடனடியாக அவர் பக்கத்து நிலையங்களுக்கு தகவல் கொடுத்தார்.

இதனை தொடர்ந்து மதுரையில் இருந்து புறப்பட்ட மைசூர்-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் மற்றும் மதுரை- செங்கோட்டை பயணிகள் ரெயில் திருமங்கலம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன. திருநெல்வேலியில் இருந்து ஈரோடு- மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரெயில் விருதுநகரில் நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து பஸ்சை அங்கிருந்து எடுக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டன. பொக்லைன் வாகனம் வரவழைக்கப்பட்டு பஸ் சற்று தூக்கிவிடப்பட்டது. அதன் பிறகு சுமார் 9.20 மணியளவில் பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

இதன்காரணமாக 1½ மணிநேர தாமதத்திற்கு பின்னர் 3 ரெயில்களும் ஒன்றன்பின் ஒன்றாக இயக்கப்பட்டன. இந்த சம்பவம் திருமங்கலம் பகுதியில் இன்று சிறிது நேரம் பதட்டத்தை ஏற்படுத்தியது.

Similar News