செய்திகள்

ஆன்லைன் விளம்பர மோசடிக் கும்பல் தலைவனைப் பிடிக்க கர்நாடகா விரைந்தது தனிப்படை

Published On 2016-12-09 11:46 GMT   |   Update On 2016-12-09 11:46 GMT
ஆன்லைனில் விளம்பரம் செய்து மோசடி செய்த கும்பலின் தலைவனைப் பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் கர்நாடகா விரைந்துள்ளனர்.
கோவை:

கோவை நஞ்சுண்டாபுரம் ரோடு ஸ்ரீபதி நகரை சேர்ந்தவர் அருண்பாபு(வயது 60). வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவர் பழைய கார் வாங்குவதற்காக ஆன்லைனில் ஓ.எல்.எக்ஸ். இணையதளத்தை பார்த்தார். அதில் சென்னை பதிவெண் கொண்ட ஒரு கார் ரூ.4½ லட்சத்துக்கு விற்பனைக்கு இருந்தது. அங்கு கொடுக்கப்பட்டிருந்த 2 செல்போன் எண்களில் பேசினார்.

அப்போது எதிர்முனையில் பேசியவர் ரூ.5 ஆயிரம் முன்பணம் வங்கிக்கணக்கில் செலுத்துமாறு கூறினார். அதன்படி அருண்பாபு பணத்தை செலுத்திய பிறகு அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. செல்போன்களும் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதுகுறித்து அருண்பாபு கோவை மாநகர போலீசில் புகார் அளித்தார். கமி‌ஷனர் அமல்ராஜ், துணை கமி‌ஷனர் லட்சுமி ஆகியோரது உத்தரவின் பேரில் சைபர் கிரைம் பிரிவு உதவி கமி‌ஷனர் ஆசைத்தம்பி, இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பொள்ளாச்சி மற்றும் பெங்களூரை சேர்ந்த கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

மோசடியில் ஈடுபட்ட பொள்ளாச்சி சுண்ணாம்பு காலவாய் பகுதியை சேர்ந்த நரேஷ் என்ற சண்டி நரேஷ் என்ற தளபதி நரேஷ்(23), ஷெரீப்(22), அபுதாகிர்(31), மதீனா பேகம்(29), முஸ்தபா (22), சப்ருதீன்(22), முசாதிக் (20) ஆகிய 7 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஒரு கார், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

பெங்களூரை சேர்ந்த சிபு (23) என்பவர் இந்த கும்பலின் தலைவனாக செயல்பட்டுள்ளார். பிடிபட்ட கும்பல் போலி அடையாள அட்டை, லைசென்சு ஆகியவற்றை வைத்திருந்தனர். இதன்மூலம் போலி பெயர்களில் சிம் கார்டு பெற்று அதன் மூலம் ஆன்லைனில் விளம்பரம் கொடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கும்பல் கடந்த 6 மாதங்களில் மட்டும் 20-க்கும் மேற்பட்டோரிடம் லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது.

இந்த கும்பல் ஆன்லைன் இணையதளங்கள் மற்றும் பேஸ்புக் மூலம் விளம்பரங்கள் செய்துள்ளனர். அதைப் பார்த்து செல்போனில் தொடர்பு கொள்பவர்களை பெங்களூரில் உள்ள ஒருவரது வங்கி கணக்கில் முன் பணத்தை செலுத்த கூறியுள்ளனர். அதன்படி பணம் செலுத்தியதும் பெங்களூரில் இருந்து பொள்ளாச்சியில் உள்ள நபர்களுக்கு பணம் பிரித்து அனுப்பியதும் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த கும்பலின் தலைவன் சிபு மற்றும் போலி ஆவணங்கள் தயாரிக்க உதவியவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் கர்நாடகா விரைந்துள்ளனர்.

கைதான 7 பேர் மீதும் மோசடி, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி மோசடி செய்யும் சட்டப்பிரிவு 66(டி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 7 பேரையும் கோவை ஜே.எம்.6 கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Similar News