செய்திகள்

சின்ன ஏர்வாடி அருகே 5 மீனவர்களுடன் விசைப்படகு சிறைப்பிடிப்பு

Published On 2016-12-09 07:50 GMT   |   Update On 2016-12-09 07:50 GMT
சின்ன ஏர்வாடி அருகே 5 மீனவர்களுடன் விசைப் படகு சிறைபிடிக்கப்பட்டது. மீனவர்கள் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி அருகே உள்ள கீழக்கரை, சின்னஏர்வாடி, பெரிய பட்டணம் பகுதியில் ஏராளமான நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர்.

ஆனால் மண்டபம் பகுதியை சேர்ந்த விசைப் படகு மீனவர்கள் மேற்கண்ட கடல் பகுதியில் விதிகளை மீறி மீன்பிடித்து வருகின்றனர். விசைப் படகுகள் கடலில் இருந்து 3 நாட்டிகல் மைல் தொலைவிற்கு அப்பால் சென்று தான் மீன் பிடிக்க வேண்டும் என்ற விதி உள்ளது.

ஆனால் கீழக்கரை, சின்ன ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் மண்டபத்தை சேர்ந்த விசைப்படகுகள் விதிகளை மீறி 3 நாட்டிகல் மைலுக்குள்ளேயே மீன் பிடித்து வருகின்றனர். இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் நேற்று மண்டபத்தை சேர்ந்தமுகமது அபுபக்கர் என்பவரின் சொந்தமான விசைப் படகில் மண்டபம் மீனவர்கள் முகமது ரமலான் (வயது35), அல்லா பிச்சை (34), ஜமால் முகமது (20), அப்பாஸ் (37), யூசுப் (35) ஆகியோர் சின்ன ஏர்வாடி பகுதியில் விதிகளை மீறி மின்பிடித்துக் கொண்டிருந்தனர்.

உடனே சின்ன ஏர்வாடி மீனவர்கள் விசைப்படகுடன் 5 மீனவர்களையும் சிறை பிடித்தனர். படகில் அரசால் தடை செய்யப்பட்ட 50 கிலோ கடல் அட்டையும் இருந்தது.

இதையடுத்து சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Similar News